பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————

இரண்டாம் தொகுதி/ மிகை 🞸 827

கீழே படியிறங்குகிறவரை பெண்கள் வழியனுப்ப வந்தார்கள். யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. தெருமுனை திரும்பியதும், அனந்தாச்சாரி சாமிநாதனை நெருங்கி “என்னை நீங்க ரொம்ப மன்னிக்கணும். நான் அடிமுட்டாள். பெரிய பாவம் பண்ணிப்பிட்டேன்” என்று நா தழுதழுக்க ஆரம்பித்தார். பதில் சொல்லாமல் சாமிநாதன் புன்னகை பூத்தார். சிறிது நேர மெளனத்துக்குப் பின்பே அவரிடமிருந்து பதில் வந்தது.

“சில விஷயங்களை நாம் மிகைப்படுத்தியே நினைக்கப் பழகி விடுகிறோம். திரித்து நினைக்கவும் பழகிவிடுகிறோம்.அதனாலே வர வினை இது. நம்ம மனசு சரியாயிருந்தா எல்லாம் சரியா இருக்கும்.நம்ம மனசிலேயே ‘இம்மாரல் டிராபிக்’ ஏற்பட்டுட்டா சுத்தி ஒழுங்காவே இருக்கிற எல்லாத்தையுமேகூட ‘இம்மாரலா’ நினைக்கத் தோன்றுகிறது” என்று ஆத்திரமில்லாமல் சுபாவமாகப் பதில் சொன்னார் சாமிநாதன். அவருடைய நிதானமும், தெளிவும் மிகையில்லாத அம்சங்களாயிருந்தன. 123 பிக்குப் புறப்பட்டு வரும்போது எப்படிச் சுபாவமாக வந்தாரோ அப்படியே சுபாவமாகத் திரும்பியபடியே நண்பர்களிடமும் பேசிக் கொண்டு வந்தார் அவர். முதலில் அனந்தாச்சாரியின் பரபரப்பு எப்படி மிகையாயிருந்ததோ அப்படியே இப்போது மெளனமும் மிகையாயிருந்தது. (கல்கி, தீபாவளி மலர், 1972)