பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113. ஒரு கிராமவாசி சுதந்தர
தினத்தன்று சிறைப்படுகிறான்

யனார் ஊருணியிலிருந்து நகரத்துக்குப் புறப்படும் கடைசிப் பஸ் இரவு ஏழரை மணிக்கு இருந்தது. அப்போது மணி ஏழு. வேல்சாமியின் கையில் பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த வீச்சரிவாள் இருந்தது. அரிவாளைக் கொண்டு போய்க் குடிசையில் போட்டு விட்டுப் பஸ் ஏற நேரமில்லை. ஊருக்குள் போய் அரிவாளைக் குடிசையில் போட்டுவிட்டு வருவதற்குள் கடைசிப் பஸ் போய்விடும். அரிவாளுடனேயே நகரத்துக்குப் பஸ் ஏற அவனுக்குக் கூச்சமாக இருந்தது. நகரத்துக்குச் சென்று திரும்பும் நைப்பாசையையும் அவனால் விட முடியவில்லை. சுதந்திரதின வெள்ளி விழாவுக்காக நகரை ஒளிமயமாக அலங்கரித்திருக்கிறார்களாம். அந்த வெள்ளி விழா அலங்காரத்தின் கோலாகலத்தைப் போய்ப் பார்க்கும் ஆசையில் மாலையிலிருந்தே கிராமத்தில் பலர் நகரை நோக்கிப் பஸ் ஏறியிருந்தார்கள்.

அதிகத் தூரமில்லை. ஒரு மணி நேரப் பயணந்தான். ஏழேகால் பஸ்ஸைப் பிடித்தால் எட்டேகாலுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். சுதந்தர தினக் கோலாகலத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்த பின், பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொஞ்சம் தூங்கினால் காலை நாலரை மணிக்கு முதல் பஸ்ஸில் கிராமத்திற்குத் திரும்பி விடலாம். முடிவில் ஆசைதான் வென்றது. பனைமேட்டிலிருந்து களத்தில் குறுக்கே நடந்து மெயின் ரோட்டில் இறங்கிப் பஸ் நிற்கிற இடத்துக்கு வந்து சேர்ந்தான் வேல்சாமி. சட்டைப்பையில் மூன்று ஒரு ரூபாய்த் தாள்களும் ஐந்து பத்துப் பைசாக்களும் இருந்தன. பஸ் வந்தது; இடித்துப் பிடித்து ஏற முடிந்தும் விட்டது.

“எங்கேய்யா போவணும்? மீசையைப் பார்த்தாலே அருவா மாதிரி இருக்குது. அருவா வேறே எடுத்தாந்துட்டியே? பயமாருக்குப்பா..” என்று கேலி செய்தபடியே டிக்கட்டைக் கிழித்தான் கண்டக்டர்.

அரிவாளை வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது வேல்சாமிக்கு. - “நுங்கு வெட்ட எடுத்தாந்தேனுங்க மறுபடி வூட்டாண்டே போயி வச்சிட்டு வரலாம்னா அதுக்குள்ளார பஸ்ஸை விட்டுனு போயிடுவீங்க. அதான் இப்படியே வந்திட்டேன்” என்று உள்ளே எழுகிற ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடன் அந்தக் கண்டக்டருக்கு அவன் பதில் சொன்னான். மனம் நகரத்தையும் அதன் விளக்கொளி