பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஒரு கிராமவாசி சுதந்தர தினத்தன்று சிறைப்படுகிறான்

829

அலங்காரங்களையும் காணும் ஆவலில் படபடத்தது. பஸ்ஸிலேயே பலர் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“இத்தினி ஸீரியல் ஸெட், அலங்காரங்களை இந்த இருபது வருசத்திலே நான் பார்த்ததில்லை. ஊரே ஜெகஜோதியா இருக்குது. முதல் சுதந்தர தினத்தன்னைக்குக் கூட நான் இவ்வளவு வெளக்குப் பார்க்கலை.”

“ஸில்வர் ஜூப்ளி இல்லியா? பின்னே..?”

வேல்சாமி பக்கத்துப் பிரயாணியை விசாரிக்கலானான். “ஒரு மணி நேரத்துலே பார்க்கணும்னா எதை எதைப் பார்க்கலாங்க?"

‘பஸ் ஸ்டாண்டிலே எறங்கினதும் எதிர்த்தாப்ல முனிசிபல் ஆபீஸ் பாரு. பிரமாதமா அலங்கரிச்சிருக்காங்க. அப்புறம் பக்கத்திலேயே சுதந்திர நாள் பூங்கா. ரெயில்வே ஸ்டேஷன் எல்லாம் பாரு.”

பஸ் நகரில் நுழைந்து விட்டது. நகரத்தின் விளக்கு ஒளிகளும், ஒலி பெருக்கிச் சப்தங்களும், ரேடியோ இசைகளும், ரோட்டைத் தேய்க்கும் டயர்களின் இழுவையும் ஒரே சமயத்தில் செவியைத் தாக்கின. கண்களைக் கூச வைத்தன.

வேல்சாமி பஸ் ஸ்டாண்டிலேயே ஒர் ஒட்டலில் இட்டலி, தோசை சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்க'‘கேஷ்’ கவுண்டரின் அருகே போனதும் அரிவாளை எங்கேயாவது வைத்து விட்டுத்தான் மடியிலிருந்து பணம் எடுக்க முடியும் போலிருந்தது. பணத்தை வைக்க வேண்டிய மேஜையில் அரிவாளை வைத்ததும், வாங்குகிறவன் ஒரு கணம் துணுக்குற்றான். மடியைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்ததும், “நல்ல ஆளப்பா நீ! பில் கொடுக்கிற இடத்திலே அருவாளையா வைக்கிறது? என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன்” என்றான் கேஷில் இருந்தவன்.

வேல்சாமிக்கு மறுபடியும் கூச்சமாக இருந்தது. முனிசிபல் ஆபிஸ் பிரமாதமாக வண்ண வண்ணப் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீரூற்றுக்கள் கூட நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று நிறம் நிறமாகப் பீச்சிக் கொண்டிருந்தன. வெளியிலே ஒரு நடைபாதை ஸ்டுடியோக்காரன் பிரம்மாண்டமான மூவர்ணக் கொடியைக் கட்டி வைத்து அந்தக் கொடியோடு சேர்த்துப் போஸ்ட் கார்டு சைஸ் படம் எடுத்துக் கொள்ள மூன்று பிரதிகளுக்கு இரண்டு ரூபாய்தான் என்று கூப்பாடு போட்டு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தான். வேல்சாமிக்கும் அப்படி ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசையாக இருந்தும், பணம் குறைவாக இருப்பது காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டான். முனிசிபல் ஆபீஸைப் பார்த்து முடிக்கிற போதே ஒன்பதேகால் மணி ஆகியிருந்தது. சுதந்திர நாள் பூங்காவைப் பார்க்கப் புறப்பட்டான் அவன். முதல் சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு பதினைந்தாம் தேதிதான் இந்தப் பூங்காவை முனிசிபாலிட்டியார் இந்திய சுதந்திரத்தின் நினைவாக அமைத்தார்கள். இப்போது சுதந்திரத்துக்கும் இந்தப் பூங்காவுக்கும் இருபத்தைந்து வயதாகியிருந்தது.