பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



830

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பூங்காவில் மரங்களில், செடிகளில், கொடிகளில் எங்கும் வண்ண வண்ண விளக்குகள் பளிச்சிட்டன. அந்தப் பூங்காவின் நடு மையமாக மகாத்மா காந்தி சிலையொன்று உண்டு. மிகப் பெரிய அந்தப் பூங்காவின் எல்லாப் பகுதிகளையும் சுற்றி, பார்த்து விட்டு வேல்சாமி காந்தி சிலை அருகே வரும் போது பத்து மணிக்கும் மேலே ஆகி விட்டது. சிலையைச் சுற்றி இருட்டாக இருந்தது. தட்டி, மூங்கிற்பாய் வைத்துக் கீழ்ப் பகுதியை மறைத்திருந்தார்கள். மேலே காந்தி சிலை இருட்டாக இருந்தது. வேல்சாமி துணுக்குற்றான். அவ்வளவு ஒளிமயமாகப் பூங்காவை அலங்கரித்தவர்கள் காந்தி சிலையை மட்டும் ஏன் இருளில் மூழ்க விட்டு விட்டார்கள் என்பது புரியவில்லை. பக்கத்தில் இருவர் அவனைப் போலவே சந்தேகப்பட்டு அதைப் பற்றி விவாதித்துக் கொண்டு போனது அவன் காதில் விழுந்தது.

“இப்ப இருக்கிற முனிசிபல் சேர்மனுக்கு இந்தச் சிலையைப் பிடிக்காது. அதான் இருட்டிலே தவிக்க விட்டிட்டாரு. ஏன்னா இது பழைய சேர்மன் காலத்துலே திறந்து வச்சது.”

“எந்த சேர்மன் திறந்து வச்சதானா என்ன? சிலை யாருதுங்கறதுதான் முக்கியமே ஒழிய யார் திறந்து வச்சாங்கங்கறதெல்லாம் முக்கியமில்லை. காந்தி சிலையை அலங்கரிக்காமே ஒரு சுதந்திர வெள்ளி விழா நடக்கலாமா?”

“நடக்கிறதே?”

மூன்றாவதாக எதிர்ப்பட்டவேறொருவர் இந்த இருவரின் பேச்சில் குறுக்கிட்டார். “சே! சே! நீங்க ரெண்டு பேருமே தப்பாச் சொல்றீங்க சிலையோட கீழ்ப்பாகம் உப்புப் பரிஞ்சி ரிப்பேர் நடக்குது. ரிப்பேர் முடியலை. அலங்கரிக்காததுக்கு அதுதான் மெய்யான காரணம். இதோ கீழே தட்டி போட்டு மூடியிருக்கிறதைப் பார்த்தாலே தெரியலை?”

அதில் எது உண்மை என்று வேல்சாமிக்குப் புரியவில்லை; எது உண்மையில்லை என்றாலும் காந்தி சிலை அப்போது இருட்டில் இருந்தது என்ற உண்மையை அவன் கண்ணாரக் கண்டான்.அவன் மனம் வேதனைப்பட்டது. ஐயனார் ஊருணி கிராமத்து முச்சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அவனும் மற்றக் கிராமவாசிகளும் வெள்ளிக்கிழமை தவறாமல் அகல் விளக்கு ஏற்றி ‘ரகுபதி ராகவ’ பாடுவது உண்டு; அந்த மரியாதை கூட இந்த முனிசிபல் காந்திக்குச் சுதந்திர தின வெள்ளி விழா நாளில் கிடைக்கவில்லை என்பதைப் பார்த்த போது அவன் மனம் கொதித்தான். நகரங்களில் காந்தியை மறந்து விட்டார்களா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. சுதந்திரதின வெள்ளி விழாவில், சுதந்திரநாள் பூங்காவில் காந்தி இருட்டில் கிடப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரண்டாவது ஆட்டம் படம் பார்க்கும் எண்ணத்தை அவன் கை விட்டு விட்டான்.

உடனே அந்தப் பூங்காவிலிருந்து வெளியேறிக் கடை வீதிக்குப் போனான் அவன். இரவு பதினொரு மணிக்கு அவன் அங்கே மீண்டும் திரும்பிய போது, அவன் கையில் ஒர் அகல் விளக்கு எண்ணெய் நிரப்பப்பட்டுத் திரியிடப்பட்டு இருந்தது. அதை அவன்