பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114. ஒரு கவி இந்த வழியாகத்தான்
நடந்து செல்வான்

காதல் பிறந்த பின் கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்களா அல்லது கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட பின்தான் காதலே பிறக்குமா என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்த வரை கடிதம் பிறந்த பின்புதான் காதல் பிறந்தது. பனியும் இருளும் பிரியாத ஒரு மார்கழி மாதத்து வைகறையில் சாக்கடையும், அசுத்தமும் நிறைந்த தங்கள் வீட்டு முகப்பில் அவள் கீழே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்த போது கோலத்தின்மேல் பூ உதிர்வது போல் அந்தக் கடிதம் உதிர்ந்தது. நிமிர்ந்து பார்த்தால் அவன் திரும்பி நோக்கிச் சிரித்து விட்டுப் போனான். அவனை அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் இப்படி ஒரு காரியம் செய்கிற அளவு துணிந்தவன் என்பது இதுவரை அவளுக்குத் தெரியாது. “கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போகிறேன் பேர்வழியே என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்” என்று அவள் தந்தை ஒரு நாள் அவனைப் பற்றி அம்மாவிடம் தெருவைச் சுட்டிக்காட்டிச் சொல்லி விமர்சித்ததை அவள் கேட்டிருந்தாள்.

ஆனாலும் அவன் மேல் அவளுக்கு என்ன காரணத்தாலோ ஓர் அநுதாபம். அது அநுதாபமா, தாபமா, பரிவா என்பதெல்லாம் முதலில் அவளுக்குப் புரியவில்லை. ஒல்லியாக, சிவப்பாக, உயரமாக ஒளி மின்னும் கண்களும் கூரிய நாசியும், லெனின் தாடி போல் முகத்தில் குறுந்தாடியுமாக அவன் தெருவில் வரும் போதெல்லாம் தன் அறை ஜன்னல் வழியே அவள் அவனைப் பார்த்திருக்கிறாள். அப்படி அவனை அவள் பார்த்த இரண்டொரு வேளைகளில் அவன் பார்வையும் அவளைச் சந்தித்ததுண்டு. அதன் பின்புதான் ஒரு நாள் அந்தக் கடிதத்தை எழுதி அவன் அவளுடைய கோலத்தின் மேல் போட்டுவிட்டுப் போனான்.

“சாக்கடை நீரும் சேறும் சகதியுமான இந்தச் சந்தில் உன் தந்த நிறக் கைகளால் நாள் தவறாமல் கோலம் போட்டுப் பூப்பறித்து நடுகிறாயே, இதெல்லாம் யாருக்காக என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று நடுவாக ஒரு கேள்வி மட்டுமே எழுதியிருந்தது அந்தத் தாளில் அதை ஒரு கடிதம் என்று கூடச் சொல்ல முடியாது. கையெழுத்து இடப்படாதது எப்படிக் கடிதமாக முடியும்! மறுநாள் அவளும் அதேபோல ஒரு தாளை எடுத்து அதில்: “ஒரு கவி நடந்து போகிற பாதையை அலங்கரிக்க வேண்டாமா? அதனால் தான் நாள் தவறாமல் கோலம் போடுகிறேன்” - என்று எழுதி மடித்துக் கோலப் பொடி டப்பாவில் எடுத்துச் சென்று அவன் அந்தப் பாதையாக வரும் போது அவன்