பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி ஒரு கவி இந்த வழியாகத்தான் நடந்து செல்கிறான்

835

கோலம் இடும் பெண்ணிவள் கைகளினால்
கூட்டி இழுத்தே வரைகின்றாள்
நீலமுகில் தரு நீளவிசும்பிற் கதிரவனே
நீ வரவேணும் நீ வரவேணுமென்றே”

அவளோடு அமர்ந்து அதே கவிதையைக் கேட்ட அவள் தந்தை. “பயல் நன்றாகத்தான் பாடியிருக்கிறான். ஆனால் வயசுக்கு மீறின கற்பனை. இந்தக் காலத்திலே எல்லாமே இப்படித்தான் பிஞ்சில் பழுக்கிறதுகள்” என்றார். அவர். அவனை எவ்வளவுக்கு எவ்வளவு கிண்டல் செய்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவளுக்கு அவன் மேல் பிரியம் ஏற்பட்டது. மறுநாள்.அவள் அவனுக்கு எழுதினாள்.

“உங்கள் கவிதைகளை - உங்கள் குரலை ரேடியோவில் கேட்டேன். என்னைப் பற்றிக் கூடப் பாடினர்கள். அந்தக் கோலமிடும் பெண் நான்தானே?”

அவன் அவளுக்குப் பதிலும் எழுதினான்:“கோலமிடும் பெண் மட்டுமில்லை. என் கவிதைகளிலும், வாழ்விலும் எதிர்ப்படும் ஒரே பெண் நீதான். ஒவ்வோர் இளைஞனையும் யாராவது ஒரு பெண் கவியாக்கி விடுகிறாள். என்னை நீ கவியாக்கியிருக்கிறாய். உனக்குத் தெரியுமோ தெரியாதோ, ஜன்னல் வழியே தெரியும் பூர்ண சந்திரிகை போன்ற உன் குறுகுறுப்பான முகத்தை, கண்களை, இதழ்களை, புன்னகையை, கோலமிடும் கைகளை, நீ குனியும் அழகை, நிமிரும் நேர்த்தியை, அவ்வப்போது நேரும் அவயவங்களின் வனப்பை ரசித்து ரசித்தே நான் கவியானேன். நான் கவியாயிருக்கிறேன் என்பதை விட என்னுள் நீ கவியாக வந்து தங்கியிருக்கிறாய் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். உன்னால் எனக்குக் கவிதை வருகிறது. உன் அப்பாவால் என் கவிதைகள் போய் விடுகின்றன. ‘வாட்டர் ப்ரூஃப்’ கடிகாரம் என்பதுபோல் ‘கவிதை ப்ரூஃப்’ மனம் அவருக்கு.”

அவன் பாடல் எழுதிய அந்தப் படம் ரிலீஸானதுமே, அவள் போய்ப் பார்த்து விட்டு வந்தாள். டைட்டில்கள் காண்பிக்கும் போது அவன் பெயரையும் காண்பித்த போது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அம்மாவும் அந்தப் படத்துக்கு அவளோடு வந்திருந்தாள். “வசந்தகாலத்துப் பின்னிரவுகளே, நீங்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும்” என்ற அவனுடைய அந்த ஒரு பாட்டு மட்டுமே அந்தப் படத்திலேயே சிறப்பாக அமைந்திருப்பதாய் அதைப் பார்த்த போது அவளுக்குத் தோன்றியது. அந்தப் படம் ரீலீஸான மறு ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் யாரோ எதிர்பாராத விதமாக அவளைப் பெண் பார்க்க வந்தார்கள், சாதாரணமாக ஒரு மத்திய தரக் குடும்பத்துப் பெண் எப்படித் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள முடியுமோ, அப்படியே அவளும் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டாள். பெண் பார்க்க வந்தவர்கள் பாடச் சொன்னார்கள், பாடினாள். வந்தவர்களுக்கு அவளைப் பிடித்திருந்தது. தொடர்ந்து சில வாரங்களுக்குள் கல்யாணம் நிச்சயமும் ஆகிவிட்டது.