பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



836

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அந்தக் கல்யாணம் நிச்சயமான பின் வீட்டில் அவளை அதிகம் வெளியே நடமாட விடவில்லை. கல்யாணத் தேதிக்குள் அவனை எப்படியும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவளுக்கு தினம் காலையில் கோலம் போட அவள் போக முடியாதபடி அம்மாவே முன்னால் எழுந்திருந்து வாசல் தெளித்துக் கோலத்தைப் போட்டு முடித்துக் கொண்டிருந்தாள். நடுவே ஒரு மூன்று நாள் அவள் கோலம் போடப் போக முடியாதபடி அறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று. கல்யாணத் தேதிக்கு இடையூறின்றி முன்கூட்டியே அவள் உட்கார்ந்ததில் அம்மாவுக்குப் பெரிய நிம்மதி.

அவள் குளித்த தினத்தன்று காலை அறையில் ஈரத்தலைக்குச் சாம்பிராணிப் புகை போட்டுக் கொண்டிருந்தாள். கல்யாண வேலைகளுக்காக ஒரு மாதம் ஆபீஸுக்கு லீவு போட்டிருந்த அப்பா பிரஸ்ஸிலிருந்து அச்சடிக்கக் கொடுத்திருந்த திருமணப் பத்திரிகைகளை வாங்கி வரப் போயிருந்தார். அம்மா தெருக்கோடியிலிருந்த கறிகாய்க் கடைக்குப் போயிருந்தாள். ஏனோ இன்னும் திரும்பவில்லை.

கால் மணி கழித்து அம்மா திரும்பி வந்த போது தற்செயலாக ராஜியிடம் அந்தச் செய்தியைச் சொன்னாள்.:

“ராஜி, சமாசாரம் தெரியுமோ? அந்தப் பிள்ளை ரகு - அதான் கவி கி.வி எழுதிண்டிருக்குமே, அது இன்னிக்குக் காலம்பர மெயின் ரோட்டில் ஏதோ யோசனையிலே பராக்குப் பார்த்திண்டே போயிருக்கு. பஸ் மோதி அங்கேயே உயிர் போயிடுத்தாம். ரொம்பக் கண்ணராவி. அவா வீட்டிலே ஒரே அழுகுரல். பால்யச் சாவோல்லியோ? யாருக்குத்தான் தாங்கிக்க முடியும்?”

அவள் இதயமே நின்று விடும் போலிருந்தது. நல்ல வேளையாக அவள் தலை விரிகோலமாக முகத்தை மறைத்துக் கொண்டு புகைகாட்டியபடி இருந்ததால் கண்களில் நீர் சுரப்பதை அம்மா பார்த்து விடாமல் மறைத்துக் கொள்ள முடிந்தது.

“அவா வீட்டு முன்னாலே தெருவே கூடியிருக்கு இன்னம் ஆஸ்பத்திரியிலேர்ந்து கொண்டு வரலியாம்.”

அம்மாவுக்கு அவள் பதிலே சொல்லவில்லை. அவளையும் மீறி ஒரு விம்மல் வெளியேறப் பார்த்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். கண்களில் நீர் மல்குவது மட்டும் நிற்கவே இல்லை. உலகின் வெளிப்படையான போர்வைகளும், மரபுகளும், கற்பிதங்களும் குறுக்கிட்டுத் தடுக்க முடியாத அவளுடைய உள்ளந்தரங்கத்தில் தான் அந்தக் கணமே விதவையாகி விட்டாற் போல் தோன்றியது. ஆம்! கல்யாணத்துக்கு முந்தியே விதவையாகிcவிட்டது போல உணர்ந்தாள் அவள். அந்த உணர்வை அவளால் அப்போது தவிர்க்க முடியவில்லை.

(சுதேசமித்ரன், தீபாவளி மலர், 1972)