பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115. தேனிலவும் ஒரு சாமியாரும்

சாமியார்களையும், துறவிகளையும், பண்டாரங்களையும் கண்டால் சண்முகசுந்தரத்துக்கு அறவே பிடிக்காது.பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரியில் கற்கும் நாட்கள் வரை இந்தச் சாமியார் வெறுப்பு உணர்ச்சி என்ன காரணத்தினாலோ அவனுள் முறுகி வளர்ந்திருந்தது. இன்னும் அது குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருமணத்தின் போதும், மாலையில் வரவேற்பின் போதும் பிரேமாவின் குடும்பத்தாருக்கு வேண்டிய சாமியார்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களிடம் கூட அவன் சுமுகமாக நடந்து கொள்ளவில்லை. தன் மனைவியின் குடும்பத்தாருக்குச் சில சாமியார்களைத் தெரிந்திருக்கிறது என்பதையே சகித்துக் கொள்ள முடியாதவனாக இருந்தான் அந்த இளம் மாப்பிள்ளை. பிரேமா அந்தச் சாமியார்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காகக் குனிந்த போது அவனெதிரே கைகுலுக்கித் தன் திருமணத்தை வாழ்த்த வந்திருந்த நவநாகரிக நண்பர்களிடம் பேசுகிற சாக்கில் ஒதுங்கி விட்டான். சாமியார்களைப் பொருட்படுத்தவுமில்லை; வணங்கவும் இல்லை.

“ஏதேது? ரிஸப்ஷனில் ஒரே சாமியார் மயமாய் இருக்கிறதே?” என்று ஒரு நண்பன் அவனைக் கேட்டதற்கு,“என் மாமனார் ஒரு சாமியார்ப் பைத்தியம். அவரே முக்கால் சாமியார்னு சொல்லலாம்” என்பதாகச் சிரித்துக் கொண்டே மெதுவான குரலில் பதில் சொல்லியிருந்தான் சண்முகசுந்தரம். நண்பன் அதோடு விடவில்லை.

“ஆமாம்! அவர் கால் வாசியாவது சாமியாராக இல்லாமல் இருந்ததால்தான் உனக்கு இப்படி ஒரு பெண்ணைப் பெற்றுக் கட்டிக் கொடுத்திருக்காரு இல்லாட்டி நீயும்.” என்று கிண்டலில் இறங்கினான்.

“பெரியவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. ஒப்புக்காவது கும்பிடறாப்பல நடியுங்க” என்று சாமியார்கள் வந்து போனவுடன் பிரேமா அவன் காதருகே கொஞ்சலாகச் சொல்லிப் பார்த்தாள். அவனோ பிடிவாதமான குரலில்,“அது மட்டும் நடக்காது! இந்தியாவைப் பிடித்த துரதிர்ஷ்டமே பிச்சைக்காரங்களும், சாமியாருங்களும்தான். கல்லூரியிலே படிக்கிறப்போ நானும் என் நண்பர்களும் நடத்திய பல பகுத்தறிவு விவாதக் கூட்டங்களிலே இதை நாங்க கடுமையா விமர்சிச்சிருக்கோம். உனக்கு இதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. நீ சும்மா வாயை மூடிக்கிட்டு இரு, உங்க குடும்பமே ஒரு சாமியார்க் குடும்பம், அதனாலேதான் நீ இப்பிடிப் பேசறே” என்று அவள் வாயை அடக்கி விட்டான். அதன்பின் அவள் பயந்து, பேசாமல் இருந்து விட்டாள். திருமணம் முடிந்து இரண்டு மூன்று நாள் கழித்துப் பிரேமாவும், அவளுடைய கணவன் சண்முகசுந்தரமும் தேனிலவு புறப்படுகிற தினத்தன்று கூட இந்தச் சண்டை தொடர்ந்தது.