பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

838

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மணமகள் பிரேமாவின் குடும்பம் தெய்வ பக்தி நிறைந்தது. மணமகன் சண்முக சுந்தரத்தின் குடும்பமும் அப்படித்தான் என்றாலும் சண்முகசுந்தரம் மட்டும் புதுமைவாதியாக உருவாகியிருந்தான். தன்னைப் பகுத்தறிவு மார்க்கக்காரன் என்று சொல்லிக் கொண்டான்.

“தேனிலவுக்கு எங்கே போகலாம்?” என்று தனியறையில் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பிரேமா அவனைக் கேட்டாள்.

“எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனால் கோயில், குளம், சாமியார், மடம், அது இதுன்னு எதுவும் இல்லாத ஊராப் பார்த்துப் போகணும்.”

“ஏன்? அவங்க இருந்தா உங்களுக்கு என்னவாம்? அவர்கள் பாட்டுக்கு இருந்திட்டுப் போறாங்க.”

“அதுக்கில்லே! அப்பிடி ஊர்னாலே எனக்குப் போர் அடிக்கும்.”

“அது மாதிரி எல்லாம் இல்லாத ஒரு ஊரை இனிமே நீங்கதான் புதுசா உண்டாக்கணும்.” இதைச் சொல்லி விட்டுச் சண்முகசுந்தரத்தின் முகத்தை ஏறிட்டு நோக்கிச் சிரித்தாள் அவள்.

அவர்கள் நீண்டநேர விவாதத்துக்குப் பின் கரடி மலைக் கோடை வாசஸ்தலத்தில் போய் ஒரு வாரம் தேனிலவை அனுபவிப்பது என்று முடிவு செய்தார்கள். அப்போது கோடைக்காலம் இல்லை என்பதால் கரடி மலையில் கூட்டமும் இராது என்று தோன்றியது. கரடி மலை அவ்வளவு பெரிய கோடைவாச நகரமும் அல்ல. சில ஆண்டுகளுக்கு முன் அங்கே கட்டப்பட்ட ஒர் அணைக்கட்டு, மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவற்றால்தான் அது ஒரு சிறிய ஊராகி இருந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு சுற்றுலா மாளிகையும் அங்கே இருந்தது. சுற்றுலா மாளிகையில் அதிக அறைகள் இல்லை என்பதால் முன் ஜாக்கிரதையோடு ஒர் அறைக்காகத் தந்தி மூலம் ஏற்பாடு செய்தான் சண்முகசுந்தரம். அறை கிடைத்து விடும் என்று உறுதியாயிற்று.

சென்னையிலிருந்து கரடி மலைக்குப் போக இரண்டு மார்க்கங்கள் இருந்தன. சென்னையிலிருந்து ரெயில் மூலமாகக் கரடி மலை ரோடு ரெயில்வே நிலையம் வரை பிரயாணம் செய்து அடிவாரத்தில் இறங்கி அங்கிருந்து அறுபது மைல் வரை மலைச் சாலைகளில் பஸ் மூலமோ, கார் மூலமோ பயணம் செய்து போகலாம்; அல்லது சென்னையிலிருந்தே நேராகக் கரடி மலை செல்கிற அரசாங்க எக்ஸ்பிரஸ் பஸ் மூலம் பயணம் செய்யலாம். சில நூறு மைல் தொலைவு தொடர்பாக பஸ்ஸில் பயணம் செய்வதிலுள்ள சிரமத்தைப் புரிந்து கொண்டு அப்படிச் செய்ய வேண்டாம் என்று கருதினர் புது மணத்தம்பதிகள். கரடி மலை ரோடு ரெயில் நிலையம் வரை புகைவண்டிப் பயணம் செய்து அப்புறம் மலைமேலுள்ள அறுபது மைல் தொலைவைப் பஸ்ஸில் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். ரெயிலில் புதுமணத் தம்பதிகளுக்கு வசதியான ‘கூபே’ முதல் வகுப்புப் பெட்டியே கிடைத்து விட்டதால் சண்முகசுந்தரத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.