பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தேனிலவும் ஒரு சாமியாரும்

639

கரடி மலைக்கு அடிவாரத்து ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் மாலை ஐந்து மணி பஸ்தான் கடைசி பஸ், அது மலையுச்சியை அடைய இரவு எட்டரை மணி ஆகி விடும். அவர்கள் பிரயாணம் செய்த ரயில் கரடி மலை ரோடு ரெயில் நிலையத்தை அடையும் போது பிற்பகல் நாலே முக்கால் மணி ஆகியிருந்தது. ரெயிலிலிருந்து இறங்கியதும் நிலைய வாயிலில் பிரயாணிகளை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்த பஸ்ஸில் அவர்கள் ஏறிக் கொண்டார்கள்.

அது நல்ல குளிர்காலத்தின் ஆரம்பமாகையால், அடிவாரத்திலிருந்த ரெயில் நிலையத்தில் இறங்கிய போதே காற்றுச் சில்லென்று வந்து முகத்தில் உராய்ந்தது. காதுகள் வெடவெடத்தன. ஐந்து மணிக்கே இருட்டி விட்டாற் போல வானம் முடிக் கொண்டிருந்தது. பஸ் புறப்படச் சிறிது நேரம் ஆகுமென்று தெரிந்ததனால் பிரேமாவையும் அழைத்துச் சென்று எதிரே இருந்த உணவு விடுதியில் தேநீர் குடித்துவிட்டு வந்தான் சண்முகசுந்தரம்.

பஸ் புறப்பட்டது. சாலை வளைந்து வளைந்து மேலே ஏற ஏறக் குளிரும் ஈர வாடையும் அதிகமாயின. நாலு திருப்பங்களில் திரும்பி ஆயிரம் ஆயிரத்தைந்நூறு அடி உயரம் ஏறுவதற்குள்ளேயே பஸ்ஸில் இரண்டொருவர் வாந்தி எடுத்து விட்டார்கள். முன்னெச்சரிக்கையாக ரெயில் நிலைய வாசலில் இருந்த சர்பத் கடையில் பிரேமாவுக்கு ஒர் எலுமிச்சம் பழம் வாங்கிக் கொடுத்திருந்தான் சண்முகசுந்தரம்.

“வாந்தி வருகிறாற் போலிருந்தால் இந்த எலுமிச்சம் பழத்தை மோந்து பார்! சரியாயிடும்” என்று அவளிடம் சொல்லியிருந்தான் அவன். குளிர் அதிகமாயிருந்தாலும் பயணம் உல்லாசமாயிருந்தது. பஸ்ஸின் வலப்பக்கம் மூன்றாவது வரிசையில் இருவர் மட்டுமே அமர முடிந்த இருக்கை ஒன்றில் சேர்ந்து உட்கார்ந்து பயணம் செய்தார்கள் அவர்கள். பஸ்ஸில் அதிகக் கூட்டம் இல்லை. அவர்களுக்கு முன் இருக்கை பின் இருக்கை இரண்டுமே காலியாக இருந்தன. அதனால், அவர்கள் இஷ்டம் போல் சிரித்துப் பேசியபடி பயணம் செய்ய முடிந்தது. சிரிப்பும், கும்மாளமும் பஸ்ஸையே கலகலக்கச் செய்தன.

பஸ் ஐயாயிரம் அடி உயரமுள்ள பகுதிக்கு வந்ததும் அங்கே ஒரு சிறிய ஊர் இருந்தது. அந்த ஊர் பஸ் ஸ்டாண்டில் பத்து நிமிஷம் பஸ் நின்று மறுபடி புறப்பட்ட போது அவர்களுக்கு முன்புறம் இருந்த ஸீட்டின் ஒரமாகக் காவி ஜிப்பா, காவி வேஷ்டி கோலத்தில் இளம் சாமியார் ஒருவர் ஏறி உட்கார்ந்தார். அவருடைய கழுத்தும் பிடரியுமே பின்னாலிருந்து பார்த்தால் தெரிந்தன. அந்தக் கழுத்தின் பின்புறம் அரிநெல்லிக்காய்ப் பருமனுக்குப் பாலுண்ணி போல் ஒரு தடிப்பு இருந்தது. ஏறி அமர்ந்திருப்பவர் சாமியார் என்பதாலும், தங்கள் தனிமைக்கு இடையூறாக அவர் வந்தவர் என்பதாலும் சண்முகசுந்தரத்திற்குத் தாங்க முடியாத ஆத்திரம் அந்தச் சாமியார் மேல் மூண்டு விட்டது; வெறியும் கிளம்பிவிட்டது.

தனக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர் காது கேட்கும்படியே சாமியார்களைத் திட்டிப் பேசத் தொடங்கி விட்டான் அவன்.