பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



840

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“மெல்லப் பேசுங்க அவர் காதிலே விழப் போகுது.”

“விழுந்தா விழட்டுமே யார் பயப்படறாங்க அதுக்கு!”

“போனாப் போகுது. தமிழிலே வேண்டாம். இங்கிலீஷிலியாவது பேசுங்க, அவருக்குப் புரியாமலாவது இருக்கட்டும்.”

“ஒகோ! உனக்கு இங்கிலீஷ் தெரியும்கிற பெருமையோ?”

அதற்குப் பின் ஆங்கிலத்தில் அந்தச் சாமியாரையும் வேறு சாமியார்களையும் பற்றித் தாறுமாறாக ஏதேதோ சிறிது நேரம் திட்டிக் கொண்டிருந்தான் அவன். ஆனால், முன்புறம் அமர்ந்திருந்த அந்தச் சாமியார் அவர்களுக்குப் பயந்தோ அல்லது அளவற்ற சகிப்புத் தன்மை காரணமாகவோ திரும்பவோ, உறுத்துப் பார்க்கவோ செய்யாமல் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே அசையாமல் இருந்து விட்டார். பஸ் கரடி மலையை அடைவதற்குள் ஆலங்கட்டி மழை போலத் திடீரென்று பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.

கரடி மலையில் பஸ் நின்றவுடன் அவர்கள் இறங்கவே முடியவில்லை. சாமியாரிடமும் வழக்கமான அவ்வூர் ஆட்களிடமும் மழைக் கோட்டு இருந்ததால் பஸ்ஸுக்குள்ளேயே மழைக் கோட்டை அணிந்து கொண்டு அவர்கள் கீழே இறங்கி நடந்து விட்டார்கள். பஸ் கண்டக்டரை விசாரித்ததில் சுற்றுலா மாளிகை அந்த இடத்திலிருந்து அரை பர்லாங்கு துரத்தில் இருக்கிறது என்று அவன் கூறினான்.அந்த மழையில் கூலிகள் யாரும் அங்கே தென்படவில்லை. வாகன வசதிகளும் அந்த வேளையில் அந்த மழையில் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

மழை நிற்கிற வரையில் அவர்கள் பஸ்ஸுக்குள்ளேயே நிற்க வேண்டியதாயிற்று. பஸ்ஸிலும் ஓரங்கள் எல்லாம் மழைநீர் வாரியடித்தது. பெட்டி படுக்கைகளை ஸீட்டில் வைத்து விட்டு நடுவாக நின்று கொண்டார்கள் அவர்கள்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்பே மழை நின்றது. “பகலில் வந்திருக்க வேண்டும், இப்படி இரவில் மழையில் வந்து மாட்டிக் கொண்டது தப்பு” என்றான் சண்முகசுந்தரம்.

“அப்பாவிடம் சொல்லி டிரைவரோடு காரை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்: நீங்களே தனிமை தனிமை என்று பறந்து இப்படி வரலாம் என்றீர்கள்” என்று அவனைக் குறை சொன்னாள் பிரேமா.

“ஹனிமூன் நமக்கா அல்லது டிரைவர், கார் எல்லாத்துக்குமா?”

“அப்படிக் கேட்டால், இந்தக் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றாள் அவள்.

பெட்டி படுக்கைகளைப் பங்கிட்டுச் சுமந்து கொண்டு மேட்டில் ஏறி உயரமான சுற்றுலா மாளிகை விடுதியை நோக்கி நடந்தார்கள் அவர்கள்.