பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தேனிலவும் ஒரு சாமியாரும்

841

அங்கே அவர்களுக்கு எதிர்பாராத இன்னொரு புதிய அதிர்ச்சி காத்திருந்தது. சுற்றுலா மாளிகை வாட்ச்மேன், “ஸார்! மன்னிக்கனும் திடீர்னு பி.டபிள்யூடி இலாகா மந்திரி, டிவிஷனல் இஞ்சினியர் எல்லாருமாகக் குடும்பத்தோடு வந்திட்டாங்க. அதினாலே இங்கே இருக்கிற ஆறு ‘சூட்’டும் நிரம்பிடிச்சு உங்களுக்கு ‘அலாட்’ ஆகியிருந்த ‘’சூட் கான்ஸ்லாயிடிச்சு” என்றான்.

“இந்த நடுராத்தியில் எங்கப்பா போறது? திரும்பற பஸ்ஸும் இனிமே இல்லே. மழையும் குளிரும் பயங்கரமாய் இருக்கு நீதான் பார்த்து ஏதாவது உதவி பண்ணேன்” என்று சண்முகசுந்தரம் அவனைக் கெஞ்சினான்.

“நான் ஒண்ணும் பண்றதுக்கில்லே ஸார்” என்று வாட்ச்மேன் கையை விரித்து விட்டான். மேலே இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நிற்கக் கூடத் தயாராயில்லை என்பது போல் திரும்பி உள்ளேயும் போய்விட்டான் அவன்.

“நல்ல ஹனிமூன் வந்தோம் போங்க! சிவனேன்னு ஊர்லியே இருந்திருக்கலாம். இல்லாட்டி அலுப்பில்லாமப் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் பெங்களுர் புறப்பட்டுப் போயிருக்கலாம். தனிமை தனிமைன்னு இங்கே ஓடி வந்து இப்பிடித் தவிக்க வேண்டாம்” என்று பிரேமா வேறு அவனைக் குத்திக் காட்டுவது போல் பேசத் தொடங்கி விட்டாள்.

“எனக்குத்தெரியும். பஸ்ஸிலே எப்ப அந்தச் சாமியாரைப் பார்த்தமோ அப்பவே நம்ம துரதிர்ஷ்டம் ஆரம்பமாயிடுச்சு.”

“அவரு தலையை ஏன் உருட்டறீங்க? உங்களுக்குத் தங்க இடம் கிடைக்காட்டி அதுக்கு அவரு என்ன செய்வாரு?”

அவர்கள் மறுபடி பஸ் நிலையம் வரை திரும்பி நடந்து வந்தார்கள்.

“சுற்றுலா மாளிகை, வழிப் பயணிகளுக்கான டிராவலர்ஸ் பங்களா எல்லாத்திலியும் இனிமே ‘சர்க்காருக்கு மட்டும்’னு ஒரு போர்டே மாட்டி விடலாம். மத்தவங்களை நடுத் தெருவிலே நிறுத்தறது, திண்டாட விடறதுங்கிறது இவங்களுக்கு ஒரு பழக்கமாகவே ஆயிடிச்சு” என்று சபித்துக் கொண்டே வந்தான் சண்முகசுந்தரம்.

பஸ் நிலையத்தருகே இருந்த சாப்பாட்டு ஓட்டலையும் முடியிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. அந்தக் குளிர்ந்த சூழலில் சுடச் சுடநிறையச் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த ஏழாயிரம் அடி உயரத்து மலை நகரம் இருளில் அடங்கியிருந்தது. மின்னல்களும் இடியுமாக வானம் வேறு குமுறிக் கொண்டிருந்தது. மறுபடி எந்த விநாடியிலும் மழை வரலாம் என்று தோன்றியது. தேனிலவுக்காக வந்த அவர்கள் நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்துக் கொண்டு நின்றார்கள். பஸ் நிலையத்தருகே மேட்டில் தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டு முகப்பிலிருந்து யாரோ ‘டார்ச்’சுடன் இறங்கி வருவது தெரிந்தது. மழைக் கோட்டு, குல்லாயில் ஆளே தெரியவில்லை. ஒரு நிமிஷம் இவர்களருகே தயங்கிய அந்த ஆளிடம் சண்முகசுந்தரமே சென்று தங்கள் நிலையை விவரித்தான். உதவுமாறு வேண்டினான்.