பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

842

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நானே கேட்கணும்னுதான் வந்தேன். அடடா! இந்த டுரிஸ்ட் பங்களாவை நம்பியா ‘ஹனிமூன்’ புறப்பட்டு வந்தீர்கள். இது பெரும்பாலும் காலியாயிருப்பதே வழக்கமில்லையே. ப்ராஜெக்ட் ஆபீஸர், டிவிஷனல் என்ஜினியர், பி டபிள்யூ டி. அதிகாரிகள்ன்னு யாராவது தங்கிக் கொண்டே இருக்காங்களே ஒழிய எனக்குத் தெரிஞ்சு இதிலே உங்களை மாதிரி வர்ரவங்களுக்கு இடமே கிடைச்சதில்லையே?”

“நான் தந்தி கொடுத்து ரிசர்வ் செய்யச் சொல்லியிருந்தேன் ஸார்!”

“இருந்தால் என்ன? நடு ராத்திரியிலே வந்து கூட உங்க பெட்டி படுக்கையைத் தூக்கி வெளியே போட்டு விட்டு ஒர் அதிகாரி இதில் தங்கிக்க முடியுமே! சர்க்கார் சுற்றுலா மாளிகையை நம்பி யாராவது ஹனிமூன் வருவாங்களா?“

“தெரியாத்தனமா வந்து மாட்டிக் கொண்டாச்சு இப்ப என்ன செய்யறது?”

“பரவாயில்லை! என் கூட வாங்க. இன்னிக்கு நீங்க தங்கிக் கொள்ள நான் உதவ முடியும்.”

“உங்களுக்கு ரொம்ப நன்றிக் கடன்பட்டிருக்கோம் ஸார்.”

“சே! சே! அதெல்லாம் சொல்லாதீங்க இந்த நிலையிலே நான் இருந்தா நீங்க என்ன உதவி செய்ய முடியுமோ அதைத்தான் நான் செய்யறேன். வேறொண்ணும் இல்லை.அது சரி, நீங்க ,ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா?” - “சாப்பாட்டைப் பத்தி என்ன சார்? இந்தக் குளிர்ல ஒண்டிக்க இடம் கிடைச்சாலே போதும்.”

“அப்படியில்லே, பட்டினியோட தூங்கக் கூடாது. வாங்க, ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.”

அவர்கள் அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அவர் அவர்களை அழைத்துச் சென்றது ஓட்டு வீடு, வீடு மிக மிகச் சிறியது. அந்த வீட்டில் உள்ளே மின்சாரம் கிடையாது. தெரு விளக்கின் மின்சார ஒளிதான் கீழே இருந்து பார்க்கும் போது அந்த வீட்டைக் காட்டியிருந்தது. அரிக்கேன் விளக்கு ஒளியில் ஒர் அறை. அதற்கு வெளியே நீர் தேங்கிய முற்றம்; அந்த முற்றத்து ஒரமாகச் சார்ப்பு இறக்கிய தகரத்தின் கீழே காட்டுக் கட்டைகளை வைத்து அடுப்பு எரிய விட்டு, மண் சட்டியில் உலை கொதித்துக் கொண்டிருந்தது; எல்லாம் தெரிந்தன. அறையிலிருந்த ஒரே கட்டிலைக் காட்டி, அவர்களை உட்காரச் சொன்னார் அவர் . சுவரில் பெரிய மான் தோல் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதை அடுத்து விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சாரதாமணி படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மான் தோலைப் பார்த்து அவர் வேட்டையில் ஆர்வமுள்ளவரோ என்று முதலில் நினைத்த சண்முகசுந்தரத்துக்கு அருகே மாட்டியிருந்த படங்களைக் கண்டதும் அப்படி இராதோ என்றும் சந்தேகமாக இருந்தது. அந்த மனிதர் அதிகம் பேசவே இல்லை. அரை மணி நேரத்தில் இரண்டு தட்டுக்களில் சுடச் சுட ஆவி பறக்கும் வெண் பொங்கலும்,துவையலும் வந்தன. குடிப்பதற்கு வெந்நீரும் வந்தது.