பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தேனிலவும் ஒரு சாமியாரும்

843

“இந்த நேரத்தில் இதைத் தவிர உங்களுக்கு அதிகமாக நான் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னியுங்கள்” என்றார் அந்த மனிதர்.

“மன்னிப்பதாவது! இதுவே அதிக உதவி” என்றார்கள் தம்பதிகள்.

அடுப்பிலிருந்த கட்டைகளையே அந்த அறையின் கணப்பில் கொண்டுவந்து போட்டு மேலும் கட்டைகளை அடுக்கிக் கணப்பை எரிய விட்டு, “நீங்கள் இந்த அறையில் தங்கலாம்” என்று கட்டிலைக் காண்பித்தார் அந்த மனிதர். "நீங்கள்.” என்று கேட்ட சண்முகசுந்தரத்தை இடைமறித்து, "எனக்கு வேறு இடம் இருக்கிறது. நீங்கள் அது பற்றிக் கவலைப்படவே வேண்டாம். நீங்கள் தூங்கலாம்” என்று கூறி விட்டுச் சுவரில் தொங்கிய அந்த மான்தோலை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார் அவர். அவ்வளவு நேரத்திலும் அந்த உபகாரியை முழுமையாக அடையாளம் காணக் கூடப் போதுமான வெளிச்சம் அங்கு இல்லை என்பதுதான் சண்முகசுந்தரம், பிரேமா இருவருக்குமே வருத்தத்தை அளித்தது.

“ரொம்பத் தங்கமான மனிதர்” என்றாள் பிரேமா.

“தானே தேடி வந்து உதவி செய்திருக்கிறார்” என்றான் சண்முகசுந்தரம், அதிக நேரம் அந்தப் பரோபகாரியை வியந்தே பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இரவு இரண்டரை மணிக்கோ மூன்று மணிக்கோ கண் விழித்த போது உள்ளே இருந்த டார்ச் லைட்டை எடுத்து முற்றத்துக் கதவைத் திறந்து விளக்கு ஒளியைப் பாய்ச்சிய சண்முகசுந்தரம் அங்கே தெரிந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

அவர்களுக்காகக் கட்டிலையும் அறையையும் தியாகம் செய்த அந்த உபகாரி முற்றத்தின் கோடியில் மாட்டுக் கொட்டம் போல் தோன்றிய ஓரிடத்தில் மான்தோலை விரித்து உட்கார்ந்தபடியே பனியில் சிரமப்பட்டுத் துரங்கிக் கொண்டிருந்தார். முழங்காலில் முகத்தைப் புதைத்தபடி தூங்கிய அந்த மனிதரின் பிடரியில் விளக்கொளி பட்டபோது இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது அவனுக்கு. பஸ்ஸில் தங்களுக்கு முன்புறம் அமர்ந்து வந்த சாமியாரின் பிடரியில் இருந்தது போல் ஒரு சிறு கட்டி இந்த மனிதரின் பிடரியிலும் இருக்கவே, அந்தச் சாமியார்தாம் இவரோ என்று சந்தேகம் தோன்றியது. இரவில் அதை மேலும் தெளிவாக அறிய முடியவில்லை.

திரும்பி உள்ளே வந்து, “பிரேமா நமக்காக அறையைக் கொடுத்து விட்டு அந்த மனிதர் மாட்டுக்கொட்டத்துப் பனியிலே உட்கார்ந்தபடியே தூங்கறாரு” என்றான் சண்முகசுந்தரம் தனது மற்றொரு சந்தேகத்தை அப்போது அவளிடம் சொல்லவில்லை அவன்.

விடிந்ததும் அந்தப் புதிரும் விடுபட்டது. முதல் நாள் பஸ்ஸில் முன்புறம் அமர்ந்து வந்த இளம் சாமியாரே அவர்தான். பஸ்ஸில் சாமியார்களைப் பற்றிப் பேசியது, திட்டியது எல்லாவற்றையும் எண்ணி இப்போது மிகவும் கூச்சம் அடைந்தான் சண்முகசுந்தரம். சாமியாரோ அதிகாலையில் நீராடித் திருநீறு குங்குமம் துலங்கும் நெற்றியுடன் பால் போல் வெண்மையான கறையற்ற தூயபல் வரிசை தெரிய சிரித்தபடி