பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

844 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவர்களுக்குத் தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்தார். தேநீரை நீட்டிக் கொண்டே திடீரென்று சரளமானதும், அழகியதுமான நல்ல ஆங்கிலத்தில் அவர் உரையாடத் தொடங்கவே, சண்முகசுந்தரம் மேலும் மேலும் கூச்சம் அடைந்து குன்றிப் போனான்.

“சாமீ! நீங்க என்னை ரொம்ப மன்னிக்கணுங்க” என்று நாத்தழுதழுக்க அவன் தொடங்கிய போது, “இந்த மலைப் பகுதி எஸ்டேட் கூலிகளுக்குக் கல்வி, சமய ஒழுக்கங்களைப் பரப்ப எங்க மிஷன் என்னை இங்கே அனுப்பியிருக்கு. எளியேன் பெயர் பிரம்மச்சாரி சீலானந்தன்” என்று தம்மை அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் அந்த மனிதர். அவர் முகத்தில் பாலமுருகனின் களை கொஞ்சியது. பற்கள் முத்துப்போல் பளீரென்று ஒளி வீசின.

“உங்களுக்கு சாமியார்கள் மேல் இருக்கிற கோபத்தைப் பார்த்ததும் நான் யார்னு தெரிஞ்சா நீங்க ராத்திரி இங்கே என்னோட தங்கக் கூட மாட்டீங்களோன்னு பயந்து போனேன். அதனால்தான் விடியற வரை நான் யார்னு உங்களைத் தெரிஞ்சுக்க விடலை”

“தப்பு! நான் ராத்திரியே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன் சாமி!”

“ஆமாம்! அதுவும் எனக்குத் தெரியும்! நள்ளிரவில் நீங்கடார்ச்சுடன் முற்றத்துக்கு வந்தீங்க. அப்ப நான் கண் விழித்திருப்பது தெரிந்தால், நீங்கள் என்னோடு தர்க்கித்து நேரத்தை வீணாக்குவீர்களோ என்று அஞ்சிய நான் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தூங்குவது போல் இருந்தேன்.”

“சுவாமி! உங்க உபகாரம் ரொம்பப் பெரிசு”

“எந்த உபகாரமும் பெரியதில்லை. உங்களைப் போன்ற கோடிக்கணக்கான கிருகஸ்தர்களுக்கு உதவவே, எங்களைப் போல நூற்றுக் கணக்கானவர்கள் சந்நியாசிகளாகிறோம். நாங்கள் உங்களுடைய தொண்டர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.”

விதண்டாவாதக்காரனும் வம்புக்காரனுமாகிய தன் கணவன் சண்முகசுந்தரம் முதல் முதலாக ஒரு சாமியாரை நோக்கிக் கண்களில் நீர் நெகிழக் குழைந்து கை கூப்பி நிற்கும் விநோதத்தைப் பிரேமா அப்போது பார்த்தாள். அவளுக்கு உடல் சிலிர்த்தது.

இரண்டு நாளைக்குப் பின் கரடி மலையிலிருந்து ஊர் திரும்பிய போது சென்னையில் ரெயில் நிலையத்தில் சண்முகசுந்தரம் தம்பதிகளைத் தற்செயலாகச் சந்தித்த ஒரு நண்பன்,”என்ன ஹனிமூன் எப்படி?” என்று சிரித்தபடி கேட்டான்.

“ரொம்ப நல்லாயிருந்திச்சு. கரடி மலையிலே நல்ல கிளைமேட். அங்கே போனப்பறம் என் மூளையேகூடத் தெளிவாகி இருக்கு” என்று பிரேமாவை நோக்கிக் கண் சிமிட்டியபடி நண்பனுக்கு மறுமொழி கூறினான் சண்முகசுந்தரம். நடுங்கும் குளிரில் ஹனிமூன் வந்தவர்களுக்கு இருந்த ஒரே கட்டிலையும் அறையையும் ஒழித்துக் கொடுத்து விட்டு முற்றத்தில் மான் தோலில் அமர்ந்தபடி சிரமப்பட்ட அந்த இளம் சாமியாரை நினைத்தபோதெல்லாம் மெய் சிலிர்த்த சண்முகசுந்தரம்,