பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116. பெண்ணுக்கு மரியாதை

ங்கீதச பையின் வருடாந்தரப் பேரவைக் கூட்டம் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை காபி, சிற்றுண்டியுடன் தொடங்கியது. இதற்கு முன்பெல்லாம் ‘ஜெனரல் பாடி’ கூட்டத்துக்கு வரச் சொல்லி ஒரு தபால் கார்டு மட்டும்தான் அழைப்பாக வந்து சேரும். இந்த வருடம் சபையின் பொருளாதார நிலைமை மிகவும் திருப்திகரமாக இருந்ததாலோ, உறுப்பினர்கள் நிறைய வர வேண்டும் என்பதற்கு ஒரு கவர்ச்சி அம்சமாகவோ கார்டில் கீழே ஒரு குறிப்பாக ‘உறுப்பினர்களுக்குக் காலைச் சிற்றுண்டி, காபி கூட்டத்திலேயே வழங்கப்படும்’ என்றும் சேர்த்து அச்சிட்டிருந்தார்கள். அப்பா காலமான பின் நாலு மாதத்துக்கு முன் குடும்பத்தின் ‘மெம்பர்ஷிப் கார்டு’ தன் பெயருக்கு மாற்றப்பட்டதிலிருந்து இன்று வரை சுந்தரேசன் சபா பக்கமே போக நேரவில்லை. நடுவே இரண்டொரு நாடகங்களுக்காக வந்த டிக்கெட்டைக் கூட நண்பர்கள் யாரிடமோ கொடுத்தனுப்பியிருந்தான்.அம்மா போக முடியாது. அவனும் போக விரும்பவில்லை. டிக்கெட் வீணாக வேண்டாம் என்றுதான் நண்பர்களை அனுப்பியிருந்தான் அவன்.

சுபாவத்தில் அவன் பெரிய சங்கோஜி. அளவுக்கு அதிகமான கூச்சக்காரனும்கூட. கூட்டத்தில் திடீரென்று நாலைந்து பேராக அவனருகே பேச வந்து விட்டால் கூடத் திணறிப் போவான் அவன். அந்த நாலைந்து பேரில் யாராவது ஒரு பெண்ணும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாாம். ’என்ஜினியரிங்’ கல்லூரியில் சேர்ந்ததும் ‘ராகிங்’ தொல்லைகளுக்குப் பயந்து கொண்டு முதல் மாதம் முழுவதும் உடல் நலமில்லை என்று டாக்டர் சர்டிபிகேட்வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறான் அவன். அவ்வளவு பயந்த சுபாவம்.

“உன்னைப் போல் இருக்கிறவனைத் திருத்தி விட முடியுமானால் ‘ராகிங்’ கூட அவசியம்தான்னு தோன்றது” என்று அப்போதெல்லாம் தந்தையே அவனைக் கேலி செய்திருக்கிறார். போகட்டும். அதெல்லாம் பழங்கதை. அப்பா காலமான புதிதில் சபாவுக்குப் போனால் யார் யார் அங்கேயே தன்னை துக்கம் விசாரிக்கக் கூடுவார்கள் என்று எண்ணி அவர்களுக்குக் கூசியே அங்கே போகாமலிருந்தான் அவன். இப்போது மாதங்கள் சில ஆகி விட்டதால் இன்றையப் பேரவைக் கூட்டத்துக்குப் போகலாம் என்று கொஞ்சம் துணிவு வந்தது சுந்தரேசனுக்கு.

சிறப்பம்சமாகக் காபி - சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்திருந்ததனால் காலை எட்டு மணிக்குப் பேரவையைக் கூட்டியிருந்தார்கள். சுந்தரேசன் சபாவுக்குப் போய்ச் சேரும் போது மணி எட்டேகால் ஆகியிருந்தது. கூசிக் கூசி உள்ளே நுழைந்தான் அவன். நல்லவேளையாக அது பேரவைக் கூட்டமாகையினால் இளம் பெண்கள் அதிகமாகத்