பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பெண்ணுக்கு மரியாதை

847

தென்படவில்லை. ஆண்களைப் போல துணிவு, பார்வை, தைரியம் எல்லாம் பெற்று விட்ட சில நடுத்தர வயது மாமிகள் மட்டும் தென்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் சிற்றுண்டியில் தீவிரமாயிருந்தனர். சுந்தரேசனின் நல்லவேளையோ, போதாத வேளையோ அவன் உள்ளே நுழைந்ததும் சபையின் தலைவர் ஒய்வு பெற்ற பெரு நீதிமன்ற நீதிபதி உத்தமனூர் கணபதி சாஸ்திரியின் பார்வையில் பட்டு விட்டான். “ஹலோ! உங்க ஃபாதர் இந்த சபையிலே இருபது வருஷம் எவ்வளவோ ‘ஆக்டிவ்’ஆக இருந்தார். ஃபவுண்டர் மெம்பர் வேறே. நீ என்னடான்னா இந்தப் பக்கம் எட்டிப் பாக்கிறது கூட இல்லை. உன்னைப் போல வாலிபப் பிள்ளைகள் எல்லாம் நிறைய ஒத்துழைக்கணும் அப்பா” என்று சாஸ்திரி அவனை மிகவும் உற்சாகமாக வரவேற்கவே, அவன் திணறிப் போனான்.

சாஸ்திரிக்கு அருகே அவருடைய பெண் வயிற்றுப் பேத்தி பஞ்சாபி டிரஸ்ஸில், திமிறிக் கொண்டு பாய்வதற்குத் தயாராகக் காத்திருக்கும் அரபிக் குதிரை போன்ற உடற்கட்டுடன் நின்று கொண்டிருக்கவே, சுந்தரேசனின் கூச்சம் அதிகமாயிற்று. சாஸ்திரியின் பெண்ணும் மாப்பிள்ளையும் டேராடூனில் இருந்தாலும், பேத்தி கல்லூரிப் படிப்புக்குச் சென்னையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். தாத்தா, பாட்டியோடு தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். சங்கீத சபா வாலிபர்களிடையே இவள் அழகும் கவர்ச்சியும் எல்லாம் போதுமான அளவு விளம்பரம் பெற்றிருந்தன. நாலைந்து வழுக்கைத் தலைகளும், ஐந்தாறு கிழங்களும் கூடஅவளருகே சூழ்ந்து நின்று கொண்டு, ‘இந்த டிரஸ் உனக்குப் பிரமாதமா இருக்கு, பேபி’ என்று புகழ்ந்து கொண்டிருந்தன. சாஸ்திரி தம் பேத்தியைச் செல்லமாக அழைக்கும் பெயர் பேபி என்பது.

“பேபீ! இவனைத் தெரியுமா? நம்ம சபேசனோட ஸன். பி.இ. முடிச்சிட்டு ஃபாதரோட கன்ஸர்ன்ஸ் எல்லாம் கவனிச்சுக்கிறான்” என்று சாஸ்திரி தம்முடைய பேத்திக்கு சுந்தரேசனை அறிமுகப்படுத்திய போது, அந்த அரபிக் குதிரை அபிநயம் பிடிப்பது போல் அழகாகக் கை குவித்து, அவனை வணங்கியது. அவள் முகத்தையும், அப்புறம் அந்த முகத்தில் மாதுளை மொட்டுப் போல் உதடுகளையும், அப்புறம் அதில் சிரிப்பையும் ஒரு முறை நன்றாக நிதானமாகப் பார்த்து விட வேண்டும் என்று உள்ளே ஆசை தவித்தும் தைரியமில்லாமல் அவன் பராக்குப் பார்த்துச் சமாளித்தான். கேசத்திலிருந்து கால்கள் வரை, மறுபடி கால்களிலிருந்து கேசம் வரை அவளை ஒரு முறை, இரு முறை, பல முறை பார்த்து விடத் துடித்தும், அவனால் துணிய முடியவில்லை. அதட்டுவது போன்ற குரலில் கணபதி சாஸ்திரி அவனிடம் கூறினார்.

“எங்கேயாவது மூலையில் போய் உட்கார்ந்து விடாதே. முதல் வரிசையில் உட்கார், ஆல் தி ஃபவுண்டர் மெம்பர்ஸ் ஷூட் பி இன் த ஃபர்ஸ்ட்ரோ , தெரிஞ்சுதா?”

சுந்தரேசன் பயந்தபடியே சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான். ஆனால் தன்னை அவர் எதற்காக் அப்படி முதல் வரிசையில் அமரச் செய்தார் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப் போயிருப்பான்.