பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

848

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஜெனரல் பாடி கூட்டத்திற்கு சாஸ்திரி தலைமை வகித்தார். கூட்டத்தின் ‘அஜெண்டா’வில் அன்று செய்யவிருந்த காரியங்களாகக் குறித்திருந்தவை ஒரு செயலாளர், ஒரு கூட்டுச் செயலாளர், நிர்வாகக் குழுவினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாகும். சாஸ்திரி மேடையில் போய் அமர்ந்ததும், அவரோடு இருந்த அவர் பேத்தி முதல் வரிசையில் சுந்தரேசனுக்கு அருகே காலியாயிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள். அவளுடைய நளினமான வாசனைகள், பவுடர், ஹேர் ஆயில் கமகமப்பு, மல்லிகைப் பூவின் மணம் எல்லாமாகச் சேர்ந்து நிராயுதபாணியாக இருந்த சுந்தரேசன் மேல் ஒன்று கூடிப் படையெடுத்தன. கால் மேல் கால் போட்டு சுதந்திரமாக உட்கார்ந்திருந்த சுந்தரேசன் மெல்லக் காலை எடுத்து விட்டு நாற்காலியோடு ஒட்டினாற் போல் ஒடுங்கி இடுங்கி உட்காரத் தொடங்கியதைக் கண்டு,

“ஸிட் யுவர் ஸெல்ஃப் கம்ப்பர்ட்டபிலி, ஐ திங்க் ஐ யாம் நாட் டிஸ்டர்பிங் யூ” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தாள் பேபி. அப்போதும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முயன்று முடியாமல் தோற்றான் அவன். உடனே பொருத்தமாக அவள் நெஞ்சில் போய் இறங்கிச் சுகமாகத் தங்கும்படி நாலு இங்கிதமான வார்த்தைகளைப் பதிலாகச் சொல்ல எண்ணி வார்த்தைகளும் துணிவும் வராததால் சும்மா இருந்து விட்டான். அவன் சும்மா இருந்தததைக் கண்டு ‘மேனர்ஸ்’ தெரியாதவன் என்று அவள் அவனைப் பற்றி நினைத்திருக்கக் கூடும். அவள் அப்படி நினைத்து விடக் கூடாதே என்றும் அவன் மனம் தயங்கியது. அவள் அருகே அமர்ந்திருக்கிற பரபரப்பில் அவனுக்கு ஒரு வேலையுமே ஒடவில்லை. ஒன்றுமே பேச வரவில்லை. ஒன்றுமே செய்ய முடியவில்லை.

சபாவின் செயலாளர் பதவிக்கு முந்திய ஆண்டில் இருந்தவருடைய பெயரே பிரேரேபிக்கப்பட்டது. கூட்டுச் செயலாளர் பதவி என்ற ஒன்றே முந்திய ஆண்டில் கிடையாது.செயலாளருக்கு அதிகமாயிருக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு என்று இந்த ஆண்டு அந்தப் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.அந்த சபாவில் தலைவர் கணபதி சாஸ்திரியின் செல்வாக்கு நிரந்தரமானது. அவர் ஒரு பதவிக்கு யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு அதற்குப் போட்டி வருமென்பது நடவாத காரியம். அவர் வார்த்தைக்கு எல்லாருமே கட்டுப்படுவார்கள்.

திடீரென்று சுந்தரேசன் முற்றிலும் எதிர்பாராதபடி கூட்டுச் செயலாளர் பதவிக்கு அவன் பெயரையே பிரேரேபணை செய்து வைத்தார் கணபதி சாஸ்திரி,

"இந்தச் சபையை உருவாக்குவதில் அந்தக் காலத்தில் எனக்குத் துணையாயிருந்த காலஞ் சென்ற தொழிலதிபர் சபேசனின் புதல்வர் சுந்தரேசனைக் கூட்டுச் செயலாளர் பதவிக்குப் பிரேரணை செய்கிறேன்” என்று சாஸ்திரி கூறியதும், அந்தப் பிரேரணை ஏக மனதான ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அவன் எழுந்து மறுக்கவும் முடியவில்லை. - “கங்கிராஜுலேஷன்ஸ்” என்று அவன் காதருகே இனிய குரலில் கிளுகிளுத்தாள் அருகே உட்கார்ந்திருந்த பேபி. அந்தப் பாராட்டுக்கு நன்றி சொல்லவும் அவனால்