பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

850

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வீட்டுக்குத் திரும்பி வந்த பின்னும் பேபியைப் பற்றி இந்த சிந்தனையை விட முடியாமல் இதையே நினைத்துத் தவித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன். திடீரென்று தான் சபாவுக்கு எந்தக் கோலத்தில் போயிருந்தானோ, அந்தக் கோலத்தில் நிலைக் கண்ணாடிக்கு முன்னே போய் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டான் அவன். தன்னுடைய இந்தத் தோற்றம் அவளுடைய கண்களைக் கவர்ந்து மனத்தில் பதிந்திருக்குமா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் இப்படிக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் அவன். ரொம்பவும் ‘ஸ்மார்ட்டாகவும்’ அழகாகவும்தான் இருந்தது. ‘டியூக் ஆஃப் எடின்பரோ’ போல் உயரம், ‘கிரிகிரி பெக்’கின் முக அமைப்பு எல்லாமே ஸ்மார்ட் ஆகத்தான் இருந்தன. இந்த உவமைகள் எல்லாம் அவன் நண்பர்கள் பல முறை அவனிடம் கூறி அலுத்தவை.

சங்கீத சபையில் இருந்து புறப்படு முன் அவளிடம் எப்படிச் சொல்லி விடை பெற்று வணங்கினானோ அப்படியே கண்ணாடிக்கு முன் வணங்கிப் பார்த்தும் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டான் அவன். எதிரே மகாத்மா காந்தியையோ, விவேகானந்தரையோ பார்த்தது போல் அவ்வளவு பயபக்தியோடுதான் அவளை வணங்கியிருக்கிறோம் என்பதும் உறுதியாயிற்று. ‘அளவு கடந்த மரியாதையோடு பழகிய தன்னிடம் அவள் ஏன் விடை பெறும் போது இவ்வளவு அவமரியாதையாக நடந்து கொண்டாள்?’ என்பதுதான் அவனுக்குப் புதிராக இருந்தது.

சாஸ்திரி அறிமுகப்படுத்தியதும் நாணிச் சிரித்த அதே நளினம். நான் அவளிடமிருந்து விடைபெறும் போது எங்கு போயிற்று? திடீரென்று அவள் ஏன் என்னிடம் மாறினாள்? அவள் அப்படி மாறும்படி எந்த விதத்திலும் நான் அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லையே?

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் கன்னிமராவில் ஜூனியர் சேம்பர் கூட்டத்துக்குப் போய் விட்டு அவன் மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பிய போது சாஸ்திரி போனில் அவனைக் கூப்பிட்டார். அடுத்து வரும் மாதங்களில் நடைபெற வேண்டிய ‘சபா’ புரோகிராம்களை எல்லாம்பேசி முடிவு செய்வதற்காகச் செயலாளர் வந்திருப்பதாகவும், கூட்டுச் செயலாளராகிய அவனும் உடனே வர வேண்டும் என்றும் சொன்னார் அவர்.

ஜூனியர் சேம்பரிலிருந்து வந்தவன், உடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே மறுபடி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

சாஸ்திரி வீட்டுக்குள் அவன் நுழைந்த போது கூடத்து ஸோபா கம் பெட்டில் சாய்ந்து உமன் மேகஸினைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பேபி, அவனைப் பார்த்த பின்னும் அவள் எழுந்திருக்கவில்லை. அந்த மரியாதையற்ற வரவேற்பு அவனைத் துணுக்குறச் செய்தது. அவன் தயங்கினான். “ஹலோ” என்று வாய் நுனி வரை வந்து விட்ட வார்த்தை அதை முதலில் சொல்ல வேண்டிய அவள் சும்மா இருந்ததினால் அடங்கி விட்டது. அதற்குள் மிஸஸ் சாஸ்திரி உள்ளேயிருந்து வந்து விட்டாள். அவன் மிஸஸ் சாஸ்திரியை எதிர் கொண்டான். “மாடியிலே