பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ' உயிர் காத்த நல்லாள் : 645 அம்மன் கோவில் புல் வெளிக்கு அருகே நாயக்கன், துரையை அழைத்துக் கொண்டு வந்தபோது, அங்கே கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த மான்களைக் கண்டு ஸ்தம்பித்துப் போனார் அவர்.இத்தகையதொரு காட்சியை அவர் இங்கே எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் கண்ணையும் கருத்தையும் கவரவல்ல இந்த அழகை 'மாமிச பட்சிணி 'யாகிய பீட்டர் துரையின் கண்களால் அழகு நோக்குடன் மட்டுமே காண முடியவில்லை. துப்பாக்கி இருந்தால் நாலைந்து மான்களைத் தீர்த்துக் கட்டிக்கொண்டு போயிருக்கலாமே. என்ற எண்ணம்தான் அவருக்கு உண்டாகியது. பீட்டர் துரை தமக்கே உரிய கொச்சைத் தமிழில் தம்முடைய 'மான் மாமிச' ஆசையை முத்துவேல் நாயக்கனிடம் கூறியிருக்கிறார். முத்துவேல் நாயக்கனோ உடனே மனம் பதறி நடுநடுங்கியவனாய், அது கூடாது என்றும், அம்மனின் ஆட்சி எல்லைக்குள், அவள் காவலில் மேயும் மிருகங்களை ஹிம்சிக்கக் கருதுவது பாவமென்றும் மிகுந்த சிரமமான விவாத விளக்கங்களோடு துரைக்குக் கூறிப் பார்த்திருக்கின்றான், துரையோ அவன் கூறியதைக் கேட்டு இடி இடியென்று சிரித்து ஏளனம் செய்திருக்கிறார். - கடைசியில் துரையின் பிடிவாதத்திற்கு முன் முத்துவேலு நாயக்கன் தாழ்ந்து போகவேண்டியதாயிற்று. அவன் மேஸ்திரி வேலை நிலைப்பது அவர் கையிலிருக்கும் போது வீணாக அவரைப் பகைத்துக் கொள்வானா? துரையின் வேண்டுகோளை மறுநாள் நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்து விட்டான். மறுநாளைக்கு மறுநாள் தை மாதப் பிறப்பாக இருப்பதனால், கோவிலில் படையலுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் பகலில் மான் வேட்டையாடுவது என்பது முடியாது. யாராவது கண்டால் முத்துவேலு நாயக்கனை ஊருக்குள் உயிரோடு நுழையவிட மாட்டார்கள். அம்மன் கோவில் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக அவனைக் கொத்திப் போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இதனால் யாருக்கும் தெரியாமல் துரையின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு ஒர் தந்திரமான ரகசியத் திட்டம் வகுத்துக் கொண்டான் முத்துவேலு நாயக்கன். மலைப் பகுதியில் மான், பன்றி முதலிய மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கந்தகத் துளையும் கரிப்பொடியையும் கொண்டு ஒருவகை நாட்டு வெடிகுண்டு செய்வது வேட்டைக்காரர்கள் வழக்கம். வெடிமருந்தை மாட்டுச் சவ்வு’ என்ற ரப்பர் போன்ற பசைச் சுருளில் பொதியச் செய்து மேலே பச்சைக் களிமண்ணைப் பூசித் தோலால் இறுக்கித் தைத்து விடுவார்கள். மலையில் மான், பன்றி முதலிய மிருகங்கள் அதிகமாகப் பழகும் இடங்களில் இப்படிச் செய்த வெடிகுண்டுகளை அங்கங்கே போட்டு வைப்பதுண்டு. களிமண் உலர்ந்ததும், இந்தக் குண்டுகளின் இரண்டு ஒரங்களிலும் மாட்டுச் சவ்வு துருத்திக் கொண்டு வெடிக்கத் தயாராக இருக்கும்! இவ்வாறு வெடிக்கத் தயாராக இருக்கும் இந்த வெடி குண்டுகள் மிருகங்களின் கால்களில் இடறியோ, சவ்வின் வாடையினால் வாயால் மிருகங்கள் குண்டைக் கவ்வுகிறபோதோ படீரென்று வெடித்து. அவைகளைக் கொன்று தள்ளிவிடும்.