பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

852

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தான் அவளை மேடம்' என்று கூப்பிட்டது அவளுடைய ‘ஸ்மார்ட்னெஸ்ஸை’ அவமானப்படுத்தி இருக்குமோ என்பதாகத் தோன்றியது அவனுக்கு என்ன செய்வது? பேசிய ஒரு வார்த்தையை மறுபடி விழுங்க முடியாதே?

அன்றைய சபா நிகழ்ச்சி முடிந்து ஒன்பதரை மணிக்கு அவன் வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த போது எதிர்பாராத விதமாக டெலிபோன் மணி அடிக்கத் தொடங்கியது. அவன் ஒடிப் போய் எடுத்தான். எதிர்ப் புறமிருந்து ஒரு பெண் குரல் சீறியது. அது பேபியின் குரல் என்று அவன் அடையாளம் புரிந்து கொள்ளவே சில விநாடிகள் ஆயின.

"மிஸ்டர், உங்களுக்கு என்னைப் பிடிக்கலேன்னா வரவேற்காம இருந்துடலாம், அதுக்காக ‘மேடம், மாமி, அத்தை, பாட்டி’ அப்படீன்னெல்லாம் கூப்பிட்டு இப்படி அவமானப்படுத்த வேண்டியதில்லே. தெரிஞ்சுக்குங்கோ.”

இதைக் கேட்டு அவன் திணறிப் போனான்.

“அது ஒரு மரியாதை வார்த்தைன்னு மட்டும் நீங்க புரிஞ்சுண்டா அதிலே தப்பா எடுக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லியே” என்று அவன் ஏதோ பதில் சொல்ல முயன்ற போது அவள் குறுக்கிட்டு, “ஒரு பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்யறதுன்னு நீங்க இனி மேல்தான் படிச்சுக்கணும். நல்ல வேளை. ‘அத்தைப் பாட்டீ’ன்னு கூப்பிடாம இருந்த மட்டிலே சரி..” என்று கடுமையாகச் சீறி ஃபோனை வைத்து விட்டாள்.

மறுபடி அவளைத் தானே கூப்பிட்டுச் சமாதானமாகப் பேசலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஃபோனை அவள் எடுக்காமல் சாஸ்திரியோ, மிஸஸ் சாஸ்திரியோ எடுத்துத் தொலைத்தால் என்ன செய்வது என்ற தயக்கம் தடுக்கவே அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் இந்த நிகழ்ச்சி அன்றிரவு அவனைத் துரங்க விடாமல் செய்து விட்டது. ஓர் இளம் பெண்ணின் முகத்தில் நாணத்தை வரவழைக்க முடியாமல் போகுமளவுக்குத் தன்னிடம் எது குறைகிறதென்று அவனுக்கே புரியாமலிருந்தது. ‘இவள் என் பேத்தி’ என்று சாஸ்திரி முதன்முதலாக அவளைத் தனக்கு அறிமுகப்படுத்திய தினத்தன்று தளதளக்கும் அரபிக் குதிரை போல இளமை திமிறிக் கொண்டு பாய அவள் நின்ற அந்தத் தோற்றத்தையும், அப்போது அவள் முகத்தில் தோன்றிய நாணச் சிரிப்பையும் எண்ணி எண்ணி உருகினான் சுந்தரேசன். மறுபடி அந்த நாணத்தை அவள் முகத்தில் வரவழைக்கும் மாயம் புரியவில்லை அவனுக்கு.

மறுநாள் காலை இதை மறக்கும்படி வேறொரு தலைவலி வந்து சேர்ந்தது. திருவொற்றியூரில் அவனுடைய ஃபவுண்டரியில் ஏதோ லேபர் அன்ரெஸ்ட் வந்து, அது கடைசியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் முடிந்தது. தொடர்ந்து நாலைந்து தினங்களாக அவன் அது சம்பந்தமாக யூனியன் தலைவர்களையும் தொழிலாளர்களையும் சந்தித்துக் காரண காரியங்களோடு கண்டிப்பாகப் பேச வேண்டியிருந்தது. தினம் மாலையில் ஃபவுண்டரியிலிருந்து வீடு திரும்ப ஐந்து மணி