பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பெண்ணுக்கு மரியாதை

353

ஆறு மணி என்று ஆகிக் கொண்டிருந்தது.அவனே நேரில் தொழிலாளர்களோடு பேசி அவர்களும், அவனும் நியாயமாக ஒரு முடிவுக்கு வந்து எல்லாம் சமரசமாக முடிவாயிற்று. அந்தச் சமரசம் நேர்ந்த வெற்றிக் களிப்போடு அன்று தானே காரை டிரைவ் செய்து கொண்டு பீச் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் அவன். துணிவாகவும், நியாயமாகவும் முயன்றால் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமான மனநிலையில் அவன் அன்று இருந்ததனால், வழக்கத்திற்கு விரோதமாக அதிக பட்ச வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

விவேகானந்தர் சிலையைக் கடந்து ராணி மேரி கல்லூரி அருகே வந்தபோது கையில் புத்தக அடுக்குடன் அங்கே பேபி நிற்பதைப் பார்த்து விட்டு அவன் காரை ‘ஸ்லோ’ ஆக்கி அவளைக் கையசைத்துக் கூப்பிட்டான். அதே பஞ்சாபி டிரஸ். அதே இளமைத் திமிறிப் பாயும் தோற்றம். புத்தகங்கள் கையில் இருந்ததால், இன்னும் அதிகம் ‘ஸ்மார்ட்டாக’த் தோன்றினாள் அவள். அவன் கூப்பிட்டதைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள். அவன் விடவில்லை. காரை விட்டு இறங்கி அருகே நெருங்கிச் சென்று “ஹேய் பேபீ! உன்னைத்தான்... நான் கொண்டு போய் வீட்டிலே ‘டிராப்’ பண்றேன்; ஏறிக்கோ” என்றான்.

அவள் திரும்பிப் பார்த்தாள். தயங்கினாள். அப்புறம் மெதுவாக நடந்து வந்தாள். அவனுக்கு வெற்றி. மகத்தான வெற்றி! பின் ஸீட்டில் ஏறிக் கொள்ளப் போனவளை முன் ஸீட் கதவைத் திறந்து விட்டு அங்கே ஏறிக் கொள்ளச் சொன்னான் அவன். அவள் மறுக்கவில்லை. காரை ஸ்டார்ட் செய்து திடீரென்று இடது பக்கம் திரும்பிக் கடற்கரை உள்சாலையில் செலுத்தினான் அவன்.

“எங்கே...?' என்றாள் பேபி.

"இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நாழி பீச்லே உட்கார்ந்திட்டுத்தான் போகலாமே?”

இதற்கும் அவள் மறுக்கவில்லை. கடற்கரை உட்புறச் சாலையில் காரைப் பார்க் செய்துவிட்டு இருவரும் மணலுக்குப் போவதற்காகச் சாலையில் குறுக்கே நடந்த போது தலை குனிந்து நடந்த அவள் ஒரு ஐஸ்கிரீம் வண்டியில் மோதிக் கொள்ள இருந்தாள். சட்டென சுந்தரேசன் அவள் கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான். அவள் முகம் சிவந்தது.

“கையை விடுங்கோ.”

அவள் குரலிலும், முகத்திலும், சிரிப்பிலும் எந்த நாணத்தைக் கடந்த பல வாரங்களாக அவன் எதிர்பார்த்து வெற்றி கொள்ளத் தவித்தானோ அந்த நாணம் ஒலித்தது. தெரிந்தது. ஒளிர்ந்தது.

‘பேபீ தேர் யூ ஆர்...’ என்று அவன் மனம் எக்காளமிட்டது. “ஒரு கோல்ட்ஸ்பாட் சாப்பிடறியா?”

அவள் ஆகட்டும் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஒயிலாக அசைத்தாள்.