பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பெண்ணுக்கு மரியாதை

855

சிணுங்கினாள் அவள். அப்போது அவள் முகத்தில் நாணத்தின் எல்லையைக் கண்டான் சுந்தரேசன்.

‘தேர் யூ ஆர்.’

அவளிடம் இவ்வளவு நாணம் எப்படி, எங்கே இருந்து வந்தது என்பதே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. சில வாரங்களுக்கு முன் தன்னிடமிருந்த அவ்வளவு நாணமும் அவளிடமும், அவளிடமிருந்த அவ்வளவு துணிச்சலும் இப்போது தன்னிடமும் இடம் மாறிவிட்டதை உணர்ந்தான் அவன்.

‘பெண்ணைப் பெண்ணாக அங்கீகரித்துப் பெண்ணாகப் புரிந்து கொண்டு, பெண்ணாகவே நடத்துவதை விடப் பெரிய மரியாதையை எந்த ஆணும் ஒரு பெண்ணுக்குச் செய்துவிட முடியாது’ என்று அறிந்த போது அவன், தான் ஓர் ஆண்மகன் என்பதை நன்றாக உணர முடிந்தது. திடீரென்று அவன் பெரியவனானான். இப்போது ஒரு பெண்ணின் ‘ஸ்மார்ட்னெஸ்’ஸை மதிக்க அவனுக்கு வழி தெரிந்து விட்டது. ‘பேபீ! தேர் யூ ஆர்’ என்று அவளை அவன் சரியாகக் கண்டு பிடித்து விட்டான். அடுத்த வாரம் முதல்முதலாக அவன் மீசையும் வைத்துக் கொண்டான்.

(1974-க்கு முன்)