பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஓர் அரண்மணை ஏலத்துக்கு வருகிறது

859


பிளாண்டும் இருக்கு. இதுக்கு மாசா மாசம் எலெக்ட்ரிக் பில்லே ஆயிரம் ரூபாய்க்கு மேலே வருது. இங்கே இந்த மதில் சுவருக்கு உள்ளே இருக்கின்ற கோவிலின் சிப்பந்திகள் உள்பட கார் டிரைவர் நாலு பேரையும் சேர்த்து மொத்தம் முப்பத்தாறு பேர் இங்கே வேலை பார்க்கிறாங்க. இவங்களோட மாதாந்திரச் சம்பளம், அலவன்ஸ் வகையிலே மட்டும் மாசம் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகுது. இதிலே யாரையும் வேலையிலிருந்து நிறுத்த ஃபாதர் சம்மதிக்க மாட்டேங்கறாரு. இந்த வீட்டோட வரவு - செலவு எனக்குத்தான் பச்சையாய்த் தெரியும். எதை எதையோ விற்று ஒவ்வொரு மாசமும் ஓட்டிக்கிட்டிருக்கேன். சிரமங்கள் புரியாம எல்லாருமே பழைய ராஜா, ராணி மனப்பான்மையிலே இருக்காங்க ஒருத்தரும் ஒரு செளகரியத்தையும் குறைச்சுக்கத் தயாராயில்லே. எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த நிலைமை உங்க காது வரையும் கூட எட்டியிருக்கு. அது தெரிஞ்சுதான் வெளிநாடுகளுக்குச் சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிற ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ கம்பெனி வைத்திருக்கிற நீங்க என்னையும் ஃபாதரையும் சுற்றிச் சுற்றி வர்றீங்க.”

“நோ நோ. உங்களுக்கு இஷ்டமில்லேனா நான் வற்புறுத்தலே. நல்ல விலை வருது. அதுதான் தேடி வந்தேன்.”

“அவசரப்படாதீங்க மிஸ்டர் சாமிநாதன்! நான் சொல்றதை முழுக்கக் கேளுங்க.”

“சொல்லுங்க”

“போன வாரம் ஒரு ஈவினிங்கிலே போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர்னு என்னைத் தேடி வந்தாரு. என்னிடம் ஒரு வெள்ளி சந்தனக் கும்பாவை எடுத்துக் காட்டி அதிலே எங்க குடும்பத்து முத்திரை இருந்ததையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்து, இதை உங்க அரண்மனை வேலைக்காரி ஒருத்தி வெள்ளிக் கடையிலே நிறுத்து விலைக்குப் போட வந்தா. கடைக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் பண்ணினாரு நாங்க போயி உடனே வேலைக்காரியை லாக் அப்பிலே வச்சிட்டு உங்களைத் தேடி வந்திருக்கோம், தயவு செய்து என்ன பண்ணலாம்னு சொல்லுங்கன்னாரு “அந்த வேலைக்காரியைப் பார்த்துக் கேட்கணும். நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரன்னேன்.” ‘நீங்க வர வேண்டாம்! அவளை இங்கேயே கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்’னு இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்கு போன் பண்ணினாரு. கால் மணி நேரத்துக்கெல்லாம் ஒரு கான்ஸ்டபிள் அந்த வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.”

“ஏம்மா, நீயா இதைக் கடைக்குக் கொண்டு போனியா அல்லது இங்கேருந்து யாராவது கொடுத்து வித்துக்கிட்டு வரச் சொன்னாங்களா?”

அவள் பதில் சொல்லத் தயங்கினாள். அழுதாள், நான் அவளை மேலும் தூண்டினேன்.

“சொல்லும்மா -பயப்படாதே! உனக்கு ஒரு கெடுதலும் வராது.”