பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

860

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


மீண்டும் அவள் தயங்கினாள். நான் அவளிடமிருந்து உண்மையை வரவழைக்கத் தூண்டினேன். கடைசியாக அவள் கண்ணீருக்கிடையே உண்மையைக் கக்கினாள்.

“சோப்பு, ஷாம்பு, பேஸ் பவுடர், ஹேர் ஆயில் எல்லாம் வாங்கப் பணம் இல்லேன்னு சின்னராணி பத்மாம்பாள் இதைக் கொண்டு போய் வெள்ளிக்கடையிலே நிறுத்துப் போடச் சொன்னார்... நீங்க இதை ராணிக் கிட்ட சொன்னீங்கன்னா என்னைக் கொன்னுடுவாக... என் வேலை போயிடும்”னு கதறினாள் அந்த வேலைக்காரி. இன்ஸ்பெக்டர் என்னிடம் வருத்தம் தெரிவித்து விட்டுப் போய்ச் சேர்ந்தார். வேலைக்காரியைக் காப்பாற்றுவதற்காக நானே பாத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு, சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், ஷாம்பு எல்லாம் வாங்கப் பணம் கொடுத்து அவளை அனுப்பினேன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா ராயல் ஃபேமிலி அது இதுன்னு நீங்க வச்சுக்கிட்டிருக்கிற வீண் பிரமையை எல்லாம் இனிமேலாவது விட்டுட ணும் எல்லாரையும் போல நாங்களும் மனுஷங்க. எங்களுக்கும் தேவைகளும், வறுமைகளும் உண்டு. அர்த்தமுள்ள வறுமைகளும் உண்டு. ஃபேஸ் பவுடருக்காக வெள்ளிப் பாத்திரத்தை விற்கிற மாதிரி அர்த்தமில்லாத வறுமைகளும் உண்டு. அதை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்.”

“ஐ ட்டூ ரியலைஸ் இட் யுவர் எக்ஸ்லென்ஸி...”

“பார்த்திங்களா.பார்த்திங்களா? ‘யுவர் எக்ஸ்லென்ஸி’தானே வேணாம்கிறேன்.”

“இந்த மாதிரி சிரமங்கள் எல்லாம் இருக்கறதுனாலேதான் அந்த பிரெஞ்சுக்காரனோட ‘ஆஃபரை’ ஒத்துக்கலாமான்னு கேட்க வந்திருக்கேன்.”

“அதுக்குத்தான் இப்போ நான் கிளியர் கட்டா உங்களுக்குப் பதில் சொல்லப் போறேன் மிஸ்டர் சாமிநாதன்! இந்த அரண்மனைங்கிற சத்திரத்தைக் கட்டிக் காக்க எதை எதையோ தெரிஞ்சும், தெரியாமலும் விற்கிறோம்.சோப்பு, சீப்புக்காக வெள்ளிப் பாத்திரத்தை இரகசியமா விற்கிறவங்க, ஸ்பென்சர் சுருட்டுக்காகத் தங்க நகையை விற்கிறவங்க, ரெயில் டிக்கெட்டுக்காகப் பாத்திரங்களை எடை போடறவங்க, எல்லாரும் இந்த மதில் சுவர்களுக்குள்ளே இருக்கோம். எங்க மான, அவமானங்களை வெளியே உள்ளவர்களுக்குத் தெரிய விடாமல் இந்த மதில் சுவர்கள் மறைத்து விடுகின்றாற் போல் உயரமாக அந்தக் காலத்திலேயே இதைக் கட்டி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கலாம். ஆனா இங்கே உள்ள ரேர் புக்ஸ் எல்லாம் அடங்கின லைப்ரரி, அருமையான பெயிண்டிங்க்ஸ் அடங்கிய கலைக் கூடம், பிரமாதமான பஞ்ச லோகச் சிலைகள் அடங்கிய சிற்ப சாலை இவை மூன்றை மட்டும் நான் எக்காரணத்தைக் கொண்டும் விற்க மாட்டேன். மற்றவர்களை விற்க விடவும் மாட்டேன். இவை இந்தக் குடும்பத்தில் என்றோ ஒரு தலைமுறையில் இண்டெலக்சுவல்ஸ் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் மிகச் சிறந்த கலா ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் இன்றைய அடையாளங்கள். இவற்றிலிருந்து ஒரு துரும்பு விற்கப்பட்டாலும் நான் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போவேன், மிஸ்டர் சாமிநாதன்! இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என் தாத்தா பாஸ்கர