பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஓர் அரண்மணை ஏலத்துக்கு வருகிறது

861

பூபதி பெரிய கலை ரசிகர். அவர் பீமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் என்பதை விட மாபெரும் கலா ரசிகராக இருந்தவர் என்பதற்காகவே நான் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமையை நான் விலை பேசி விற்க மாட்டேன். பேரம் பேச மாட்டேன். இங்கே உள்ள பெயிண்டிங்க்ஸிலேயே மிக அருமையான கலெக்‌ஷன் அந்த மோகினி சீரிஸ்தான். அதைப் பேரம் பேச நீங்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா...?”

“உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம். பெரிய ராஜா பெயிண்டிங்க்ஸை விலைக்குக் கொடுத்து விடலாம் என்பது போல் என்னிடம் சொன்னார். அதுதான் இப்போது தேடி வந்தேன்.”

“நன்றி! இந்த விஷயமாக இனி மேல் தேடி வராதீர்கள். ஒரு நிமிஷம் இருங்கள். குடிப்பதற்கு என்ன கொண்டு வரச் சொல்லட்டும். காபியா, டீயா? ‘எகானமி டிரைவ்’ காரணமாக இப்போதெல்லாம் இங்கே தேடி வருகிறவர்களுக்கு நான் குடிக்க எதுவுமே தருவதில்லை. ஆனால் உங்களை அதிக நேரம் காக்கும்படி செய்து விட்டேன்.”

“பரவாயில்லை, எனக்கு ஒன்றும் வேண்டாம்! நான் வருகிறேன்...”

“சரி! உங்கள் இஷ்டம்” என்று அவரை அதிகம் வற்புறுத்தாமல் எழுந்து கை கூப்பி விடைகொடுத்தான் பூபதி. வந்தவர் போனதும் வேலையாள் மருதமுத்துவைக் கூப்பிட்டு, “இந்தா மருதமுத்து! காரியஸ்தர் நாகராஜ சேர்வையிடம் போய் லைப்ரரி, கலைக்கூடம், சிற்பசாலை மூணுக்கும் உள்ள சாவிக் கொத்துக்களை உடனே வாங்கிட்டு வா. இனிமே அது எங்கிட்டத்தான் இருக்கணும். இல்லாட்டி எனக்கு தெரியாமலே சுருட்டுக்கும், விஸ்கிக்கும், ரேசுக்குமாக ஒண்ணொண்ணா வித்துப்பிடுவாங்க...” என்று இரைந்தான் அவன். பத்து நிமிஷங்களில் வேலைக்காரன் மூன்று சாவிக் கொத்துக்களை வாங்கி வந்து பூபதியிடம் கொடுத்து விட்டுச் சென்றான். பூபதி மேல் எல்லாருக்கும் அதிக மதிப்பு உண்டு. வாசனைச் சோப்பு, சில்க் சட்டை, தங்கச் செயின் என்றெல்லாம் மினுக்கும் மற்ற அரச குடும்பத்து இளைஞர்களோடு மாறுபட்டு எளிய உடை, எளிய பழக்க வழக்கங்கள், ஆடம்பரங்களில் வெறுப்பு, காந்தி, மார்க்ஸ், லெனின் ஆகியோரின் கோட்பாடுகளில் பற்று என்று முக்கால் கம்யூனிஸ்டு போல வாழ்ந்தான் அவன். அவனிடம் போலித் தனம் எதுவுமே கிடையாது. ராஜாவின் எட்டாவது வைப்பாட்டியின் மூன்றாவது பெண் கூட, அந்த மாளிகை எல்லையிலிருந்து வெளியே போகக் கார் இல்லாமல் நடந்து போகாத போது பூபதி நடந்தே வெளியே உலாவச் செல்வான். எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவான். நன்கு உழைப்பான். அவனைக் கண்டால் அவனுடைய அப்பாவும் பெரிய ராஜாவுமான விஜய ராஜேந்திர பீமநாத பூபதிக்குக் கூடப் பயந்தான்.

“எங்க அப்பாவைப் போல் பூர்ஷ்வாக்கள் ஒழிந்தால்தான் நாடு உருப்படும்” என்று பூபதியே தன் நண்பர்களிடம் தந்தையைப் பற்றிக் கிண்டல் செய்வது உண்டு. ஒரே ரெயிலில் ஒரே ஊருக்குப் போகும் போதுகூடத் தந்தை ரெயிலில் ஏஸி வகுப்பிலும், அவன் மூன்றாவது வகுப்பு ஸ்லீப்பிங் பெர்த் கோச்சிலும்தான் பயணம் செய்வார்கள். அந்த அளவிற்கு அவன் தீவிர வாதி. அவன் இருக்கிற வரை பீமநாதபுரம்