பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

862

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அரண்மனையின் ஒவியங்கள், பஞ்சலோக சிலைகள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடுகளுக்கு அனுப்பிப் பணம் பண்ண முடியாதென்று எண்ணி ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமிநாதன் தந்திரமாக வேறு முயற்சிகளில் இறங்கினார். சாமிநாதனிடம் தமிழ்நாடு முழுவதிற்கும் ஒடியாடித் திருடி வந்து சேர்க்கக் கூடிய சிலை திருடும் நாகரிகமான ஏஜெண்ட்டுகள் பலர் இருந்தனர். பீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்கள் நிறைந்தவர். அவரைச் சந்தித்து அவ்வப்போது ஐயாயிரம், பத்தாயிரம் என்று ‘பிராமிஸ்ரி நோட்’ எழுதி வாங்கிக் கொண்டு தாராளமாகக் கடன் கொடுக்கத் தொடங்கினார் சாமிநாதன். அங்கே பீமநாதபுரம் அரண்மனைக் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத்தால் அவை மொத்தம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பெறும் என்று சாமிநாதன் ஒரு மதிப்பீடு வைத்திருந்தார். மகன் பூபதிக்குத் தெரியாமலே பெரிய ராஜா பீமநாதபூபதி, சாமிநாதனிடம் கணக்கின்றி அவ்வப்போது பணம் வாங்கி வந்தார்.

அந்த வருஷ இறுதியில் பெரிய ராஜாவின் கடன் பன்னிரண்டு லட்சம் வரை போய் விட்டது. நடுவே சாமிநாதனின் கூட்டுறவோடு ‘பீமநாத் புரொடக்ஷன்ஸ்’ என்று ஒரு புது சினிமாக் கம்பெனியும் ஆரம்பித்தார். அது நிறைய நஷ்டத்தைத் தேடித் தந்தது. எல்லாக் கடன்களும் அரண்மனை மேல்தான் வாங்கப்பட்டிருந்தன. ஒரு நாள் பூபதிக்கும் இது தெரிய வந்தது.ஆனால் அதற்குள் நிலைமை எல்லை மீறி அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டீஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை வாசலில் பொருள்களும், கட்டிடமும் ஏலத்துக்கு வந்த போது, சாமிநாதன் தன் ஆட்களையே பணத்துடன் நிறுத்தி வைத்து லைப்ரரி, ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் ஏலத்தில் எடுத்து விட்டார். அரண்மனையும், அதைச் சுற்றியிருந்த இடங்களும் கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன.

ஏலத்தை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்திலிருந்த உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர், பூபதியின் அருகே வந்து, “ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா! உங்கள் தந்தை பெரிய ராஜா இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம்... எல்லாம் காலக் கோளாறு” என்றார்.

“நான் வருத்தப்படலே இந்த உயரமான மதிற்கவர்களுக்கு வெளியே தெருவில் தூக்கி எறியப்பட்ட பின்பு, இனியாவது என் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் வாழ்க்கை எத்தகையது என்பது புரிந்தால் சரிதான். இந்த அரண்மனை ஏலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது போகும் போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடைகளான சோம்பல், வறட்டுக் கவுரவம், டம்பம், எல்லாம் தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவதெல்லாம் இங்கே இருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஒவியங்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குச் சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். முடிந்தால் மறியல் செய்து அதைத் தடுப்போம், அல்லது அரசாங்கமே இவற்றை மீட்டு இங்கேயே ஒரு மியூஸியமும், லைப்ரரியும் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் மூலம் மனுக் கொடுப்போம்” என்று, நிதானமாகவும் திட்டத்தோடும் மறுமொழி கூறினான் பூபதி. அடுத்த கணம் அவன் தன்னுடைய