பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஓர் அரண்மணை ஏலத்துக்கு வருகிறது

863

நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மறியலுக்காகவும் கலெக்டரிடம் மகஜர் தரச் செல்லும் ஊர்வலத்துக்காகவும் காலதாமதமின்றிக் கூட்டம் சேர்க்கத் தொடங்கினான். அந்தக் கூட்டத்தை அவனால் மிகக் குறுகிய நேரத்திலேயே பெரிய அளவில் சேர்த்து விட முடிந்தது. “சிலைத் திருடர்கள் ஒழிக. சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே” என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக் கூடத்திலும், சிற்பச் சாலையிலும் பொருள்களை ஏற்ற வந்த ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ஸின் லாரிகளை மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. ஏலம் முடிந்தும் கூட அது ஒரு பொது ஜன இயக்கமாக உருவெடுத்தது. அரண்மனையிலிருந்து கார்கள், ஃபிரிஜிடேர்கள் எதை எடுக்கும் போதும் மறியல்காரர்கள் தடுக்கவில்லை. குறிப்பாக லைப்ரரி, கலைக் கூடம், சிற்பச் சாலை மூன்றிலிருந்தும் ஒரு துரும்பு கூட வெளியேறாமல் தடுத்து விட்டார்கள் அவர்கள். சில மாதங்கள் வரை அந்த மறியல் நீடித்தது. முடிவில் மறியல்காரர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. அரசாங்கப் பழம் பொருள் பாதுகாப்பு இலாகா உரியதும் நியாயமானதுமான காம்பென்சேஷன் தொகையைக் கொடுத்து ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து சிலைகள், லைப்ரரி, ஒவியங்களை மீட்டுத் தந்து உள்ளூரிலேயே அவற்றை ஒரு புதிய கட்டிடத்தில் காட்சிக்கு வைக்கவும் உத்தரவு பிறப்பித்து விட்டது. பூபதிக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியை அளித்தது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன் சிநேகிதர்களிடம் ‘பீமநாதபுரம் பாலஸ் ஆக்ஷன்’ பற்றி பேச்சு வரும் போதெல்லாம், ‘எல்லாம் அந்த இளைய ராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு, அவன் பெரிய கலகக்காரன்! காருக்காகவும் ஃபிரிஜிடேருக்காகவுமா அந்த அரண்மனையை நான் அவ்வளவு சிரமப்பட்டு ஏலத்துக்குக் கொண்டு வந்தேன்? லட்ச லட்சமாகப் பெறுகிற பிரமாதமான சிலைகள், ஒவியங்கள், ரேர் புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரனான பெரிய ராஜாவைக் குளிப்பாட்டி ரூபாயாலே அவனை அபிஷேகம் பண்ணினேன். இந்த பூபதி எல்லாத்தையும் பாழாக்கி மியூஸியம் கட்டி அதிலே கொண்டு போய் வச்சுட்டான்’ என்று சலிக்காமல் பூபதியைத் திட்டிக் கொண்டிருந்தார். பூபதியோ அதற்கு நேர்மாறாக, அரண்மனை என்ற ‘வெள்ளை யானை’ அபாயத்திலிருந்து மீட்டுத் தன் குடும்பத்தை வெளியே அனுப்பி, அவர்களை இந்தக் கால உலகுக்குரிய உழைப்பாளிகளாகவும், கஷ்டம் தெரிந்த மனிதர்களாகவும் மாற்றியதற்காகச் சாமிநாதனை அடிக்கடி வாயார வாழ்த்திப் புகழ்ந்து கொண்டிருந்தான்.

(1974-க்கு முன்)