பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

865

யுவதியின் மெருகும் மினுமினுப்பும் கொண்டு, வயதில் மட்டும் பேரிளம் பெண்ணாயிருந்த அவளுக்கு எழுத்து, கதை, நாவல், கவிதைகள், பத்திரிகைகள் என்றால் கொள்ளை ஆசை. அவளே எழுத முயன்று தோற்றவள். அதனால் எழுதி வென்றவர்கள் மேல் எல்லாம் தீராத தாபமும் தவிப்பும் உண்டு. அதுவும் வாலிப வயதினனான கவி குமுத சந்திரனிடம் அவள் பித்துக் கொண்டிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

“முதலில் அவன் மன்மதன் பிறகு கவியும் கூட” என்று சில சமயங்களில் தோழிகளிடம் இம்மாதிரி ஏக்கத்தோடு பேசியிருக்கிறாள் அவள். உயர் வர்க்கப் பெண்களின் அந்தரங்கமான வம்புகளில் இப்படி அவரவர்கள் தங்களுக்குப் பிடித்த வசீகரமான ஆண் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் தாராளமாக மனம் விட்டுச் சொல்வதும் உண்டுதான்.

அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு ரகசியத்தையாவது மற்றவர்களிடம் சொல்லியிருப்பார்களாதலால், அந்த ரகசியம் வெளியே போகக் கூடாது என்ற கவலையில் யாருடைய எந்த ரகசியத்தையும் எவரும் வெளியிட மாட்டார்கள் என்ற பொதுப் பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. கன்னக்கோலை ஒளித்து வைக்க எந்தத் திருடனுக்கும் இடம் கிடைப்பதில்லை; அவர்கள் எல்லோருமே அப்படி ஒளித்து வைக்க இடமில்லாமல் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள். உண்மைகளையும், பொய்களையும் கலந்து பேசியவர்கள் ஒருவருடைய பொய்யை மற்றொருவர் சந்தேகித்தது கூடக் கிடையாது. மெய்யைப் பாராட்டியதும் கிடையாது.பொய்களைத் துவேஷிக்கவும், உண்மையை வியந்து கொண்டாடவும் கூட முடியாமல், ‘ஸொபிஸ்டிகேஷன்’ அவர்களைத் தடுத்ததுண்டு. இருந்தாலும் இன்று ஒரு விஷயம் நேருக்கு நேர் பொய்யாகி விடாமல் இருப்பதற்கும், உண்மையாவதற்குமாக அவள் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது; கவலைப்பட வேண்டியிருந்தது. அசட்டுக் கவுரவம்தான். ஆனாலும், அதை விட முடியவில்லை.

தன் தோழிகளிடம் அவள் சொல்லியிருந்ததெல்லாம் முழுப்பொய்யுமல்ல, அந்தப் புகழ் பெற்ற கவி அவளது பள்ளித் தோழன் என்பது மட்டும் உண்மைதான். அதை அவனுக்கே எழுதி, ‘அவளை மறுபடி சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக’ அவன் கைப்படப் பதிலும் அவளுக்குக் கிடைத்திருந்தது. அந்தப் பதில் கிடைத்த துணிவில்தான் அவள் விமான நிலையத்துக்கு அவனை அழைத்து வர நம்பிக்கையோடு புறப்பட்டிருந்தாள் அன்று.

சந்தன நிறத் தோள்களின் செழுமை தெரியும்படி ‘ரவிக்’ அணிந்து கூந்தலின் மேல் மல்லிகை சூடி, கழுத்திலும் நெஞ்சிலும் வசீகரமான வாசனையுள்ள ‘செண்ட்’டை ஸ்பிரே செய்து கொண்டு விமான நிலையம் சென்றாள் அவள்.

“ஆடைகளை நான் சபிக்கிறேன்
அவை மறைக்கப் பிறந்தவை
உன்னிடமுள்ள இரகசியங்களை
அவை எனக்கு மறைக்கின்றன.


நா. பா. II — 16