பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

373

“அம்மா சொன்னாங்க. சொல்லா விட்டாலும் எனக்கே தெரியும். உன்னைப் போல் அழகாயிருக்கிற பெண்ணுக்கு அழகாயிருக்கிற எல்லாமே தெரிஞ்சிருக்கணும்.”

அவள் நாணத்தோடு தலை குனிந்தாள். சிரித்தாள். அதற்குள் இந்துவே கதவைத் திறந்து கொண்டு வந்து விட்டாள். சாப்பாட்டுக்குக் கூப்பிடப் போன வேலைக்காரி ஏ. ஸி. ரூமில் அதிக நேரம் தாமதிக்கவே, இந்துவுக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

“சாப்பிடக் கூட்டிண்டு வரச் சொன்னால், இங்கே என்னடி வம்பளந்துண்டு நிக்கறே?”

“இல்லே. நான்தான் பூத்தொடுக்கத் தெரியுமான்னு அவளைக் கேட்டேன்...”

அவன் அவர்களோடு சாப்பிடப் போனான். பகல் உணவின் போது இந்து அவனிடம் அதிகம் பேசவில்லை. வேலைக்காரியும் அடக்க ஒடுக்கத்தோடு அமைதியாகப் பரிமாறினாள். சாப்பிட்டதுமே இந்து அவனிடம் வந்து, “இன்னிக்கி ராத்திரி உங்களோட என் ஃப்ரண்ட்ஸ் அஞ்சாறு பேரும் நுண்கலைக் கழகப் பிரமுகர்களும் சேர்ந்து சாப்பிடறா. நான் அவங்களை எல்லாம் போய் அழச்சிட்டு வரணும். நீங்கரெஸ்ட் எடுத்துங்குங்க. மூணு மூணேகாலுக்கு எழுந்திருந்தாப்போதும்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

மூணே கால் மணிக்கு அவன் எழுந்து முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு, கூட்டத்திற்குத் தயாரான போது இந்து காபியுடன் வந்தாள். இப்போது பகலில் அணிந்திருந்தது போல் அவள் ‘ரவிக்’ அணிந்திருக்கவில்லை. அவள் காபி கொண்டு வருவதற்குள்ளேயே அவன் ஹாலுக்கு வந்திருந்ததனால், காபியோடு வந்த அவளை அவன் ஹாலிலேயே சந்திக்க நேர்ந்தது. அவளைத் தனியாக ஏ.ஸி. ரூமில் சந்திக்க அவன்தான் கூச வேண்டியிருந்தது.காரணம் அவளிடம் எந்தக் கூச்சங்களுமே இல்லை. அவள் ரொம்ப ‘சோஷலாக’ இருந்தாள்.

அவர்கள் வெளியேறிக் காருக்காகப் போர்டிகோவுக்கு வந்த போது தோட்டத்தில் பூத்திருந்த அவ்வளவு பிச்சிப் பூக்களையும் பறித்துக் கொட்டி அவசர அவசரமாக மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரி சீதா.

“என்னடி மாலை தொடுத்தாகறது? பூஜை படத்துக்கா” இந்துவின் கேள்விக்கு வேலைக்காரி பதில் சொல்லவில்லை. ஆனால், வெளியே போகும் எஜமானியை வழியனுப்ப மரியாதையாக எழுந்து நின்றாள் அவள். கவிஞரைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். அவனும் பதிலுக்குப் புன்முறுவல் பூத்தான். “டின்னருக்கு எல்லாம் கொண்டு வரச் சொல்லி பிரம்ம பிரகாஷ் கேட்டரிங்லே அரேஞ்ச் பண்ணியிருக்கேன். முன் பக்கத்து லான்லே டேபிள் டெகரேஷனெல்லாம் நீயே கூட இருந்து கவனிச்சுக்கோ...”

“சரியம்மா. பார்த்துக்கறேன்” அடக்கமாகப் பதில் சொன்னாள் சீதா. அவனுடைய கவிதைகளில் பித்துக் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் அந்த நகரில் ஏராளமாக இருந்ததால் சொற்பொழிவுக்குப் பெருங்கூட்டம் வந்திருந்தது.ஒரு