பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

874

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மணி நேரத்திற்கு மேல் தேன் மழை போல் அவன் செய்த சொற்பொழிவுக்கு இடையிடையே பலத்த கரகோஷங்கள் இருந்தன. கூட்டம் முடிந்ததும் அவன் ஆட்டோகிராப் வேட்டையிலிருந்து மீளவே இன்னும் ஒருமணி நேரமாயிற்று.

அத்தனை ஆட்டோகிராபிலும் அவன் கையெழுத்துப் போடுகிற வரை இந்து பொறுமையாகக் காத்திருந்தாள். அப்புறம் இந்து வீட்டுத் தோட்டத்து லானில் முக்கியமான உள்ளூர்ப் பிரமுகர்களோடும் இந்துவின் சினேகிதிகளோடும் விருந்துண்டான் அவன். சிரிப்பும், பேச்சுமாக விருந்து முடிய இரவு பதினோரு மணிக்கு மேலாகி விட்டது.

கவிஞன் ஊர் திரும்ப வேண்டிய விமானம் மறுநாள் காலை ஏழு மணிக்கு இருந்ததால், ஒய்வு கொள்வதற்காக அவன் விரைவில் தூங்கப் போனான். அறையில் முற்றிலும் எதிர்பாராத அன்பளிப்பு ஒன்று ஒரு சிறிய கடிதத்தோடு வைக்கப்பட்டிருந்தது அவனுக்கு.

அவன் தன் கழுத்தில் அணிந்து கொள்வதற்குரிய அளவு பெரிதான ஒரு பிச்சிப்பூ மாலையை தொடுத்துப் படுக்கை மேல் வைத்திருந்தாள் சீதா, அதன் மேல் உறையிட்டு ஒட்டி இருந்த சிறிய கடிதத்தை அவன் பிரித்துப் படித்தான்.

“பிரியமுள்ள கவிஞருக்கு,

வேலைக்காரி சீதா அநேக வணக்கங்கள். சொற்களால் எத்தனை எத்தனையோ மாலைத் தொடுக்கும் உங்களுக்கு நான் இந்தப் பூமாலையைத் தொடுத்து வைத்திருக்கிறேன். ‘நல்லாப் பூத்தொடுக்கத் தெரியுமாமே?’ என்று என்னைக் கேட்டீர்கள். நான் நன்றாகத் தொடுக்கிறேனா இல்லையா என்பதை இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் இருவரும் கூட்டத்துக்குப் போகும் போது ‘மாலை, பூஜை படத்துக்கா?’ என்று அம்மா கேட்டது உங்களுக்குத் தெரியும். படங்களுக்குத் தினந்தோறும் பூஜை செய்கிறேன். இன்று உங்களைப் பூஜிக்க நேர்ந்தது என் பாக்கியம். நான் இந்தக் கடிதம் எழுதினது அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்”

'உங்கள் கவிதைகளைப் பூஜிக்கும் சீதா’ என்று அதில் எழுதியிருந்த வாக்கியங்கள் அவன் மனதுக்கு இதமாக இருந்தன. இரண்டு மூன்று மணி நேரம் ஏர்கண்டிஷன் அறையில் இருந்ததன் காரணமாக அந்த மாலை அறையையே மணத்தினால் நிரம்பச் செய்திருந்தது. அந்த நறுமணத்தில் அவன் சுகமாகத் தூங்கினான்.

காலையில் சீதா காபி கொண்டு வந்த நேரத்தில் அப்போது கைவசமிருந்த தன் கவிதைத் தொகுதியின் ஒரே ஒரு பிரதியை கையொப்பமிட்டு, அவளுக்கு ஏதோ எழுதிக் கொடுத்தான் அவன்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அவனை அழைத்துச் செல்ல வந்தாள் இந்து. அவனும் தயாராயிருந்தான். கார் காம்பவுண்டைத் தாண்டுகிற வரை சீதா வீட்டு வாயிலில் நின்று பார்ப்பதைக் கவிஞன் காரிலிருந்தே கவனிக்க முடிந்தது. அவன் பெருமூச்சு விட்டான்.