பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119. விதிவிலக்காக ஒரு வியாபாரம்

டெல்லியிலிருந்து ஒரு வார விடுமுறையில் சென்னை வந்த சப்த ரிஷி தன் பழைய நண்பர்களில் யார் யாரைச் சந்திக்கலாம் என்று யோசித்த போது முதலில் எழுத்தாளர் சண்டமாருதனுடைய நினைவே வந்தது. சண்டமாருதனுடைய சொந்தப் பெயர் எஸ்.கே.வி.ரங்கசாமி. புனை பெயராகச் சண்டமாருதன் என்பதை வைத்துக் கொண்டிருந்தான். சப்தரிஷிக்கு ஊர் லால்குடி. ரங்கசாமிக்கு ஊர் ஸ்ரீரங்கம். இருவரும் திருச்சியில் கல்லூரி ஆண்டுகளில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக்கு அப்பால் இருவருடைய வாழ்க்கை வழிகளும் திசைகளும் வேறு வேறாகப் பிரிந்து விட்டன. சப்தரிஷி ஹானர்ஸ் முடித்து ஐ.எஃப்.எஸ். பரீட்சை எழுதி பாரத அரசாங்கத்தின் வெளி உறவு இலாக்கா அமைச்சரகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். ரங்கசாமி பி.ஏ. இறுதி ஆண்டு தேர்வே எழுதாமல் பாதியில் படிப்பை விட்டு விட்டுச் சென்னைக்கு வந்து ஒரு புதிய பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து, அது பாதியில் நின்று போனதனால் எழுத்தையோ, பத்திரிகைப் பணிகளையோ முழு நேரத்துக்கும் நம்பி வாழ முடியாது என்று புரிந்து கொண்ட பின், மவுண்ட்ரோடில் இருந்த ஒரு பெரிய ஏலக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து எழுத்தை உபதொழிலாகச் செய்து காலம் தள்ளி வந்தான்.

அவனுடைய குரல் கணீரென்று இருக்கவே, இந்த வெண்கலத் தொண்டை ஆசாமியையே ஏலம் போடுகிறவராகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? என்று கம்பெனிக்குத் தோன்றியது. ரங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்டார்கள். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த நானூறு ரூபாய் சம்பளத்தோடு இன்னும் ஒரு நூறு ரூபாய் சேர்ந்துத் தருவதாகச் சொன்னார்கள். ஏலம் போடுகிற வேலை வாரத்தில் ஒருநாள் மட்டுமே. மற்ற நாட்கள் அலுவலக வேலைதான். ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கும் ஏலத்துக்காக சனிக்கிழமையன்று பொருள்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்ததனால், அன்று அலுவலகத்துக்கு விடுமுறை. ரங்கசாமி அடிக்கடி எழுதிய கடிதங்களிலிருந்தும், நேரில் சென்னையில் சந்திக்க நேர்ந்த நேரங்களில் கூறியதிலிருந்தும் இந்த விவரங்களை எல்லாம் சப்தரிஷி தெரிந்து கொண்டிருந்தான்:

சப்தரிஷி சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய தினம் சனிக்கிழமை. மறுநாள் ஏலத்துக்குப் பண்டங்களைத் தயார்படுத்தி வைப்பதற்காகக் காலையில் கம்பெனிக்கு அரை நாள் போய்விட்டு, ரங்கசாமி பிற்பகலில் வீடு திரும்பி விடுவான் என்று சப்தரிஷிக்குப் புரிந்தது. சனி ஞாயிறு இரண்டு நாட்களும் சென்னை யிலிருந்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு மெயிலில் லால்குடி போக வேண்டும் என்பது சப்தரிஷியின் திட்டம்.