பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் தொகுதி விதிவிலக்காக ஒரு வியாபாரம்

377

நினைத்தபடி அன்று எழுத்தாளர் சண்டமாருதன் என்னும் தன் கல்லூரி நண்பன் எஸ்.கே.வி.ரங்கசாமியைச் சந்திக்கச் சென்றான் சப்தரிஷி. ரங்கசாமி என்ற சண்டமாருதன் சப்தரிஷியை தேடிச் சென்ற போது வீட்டில்தான் இருந்தான். அவன் ஏதோ பத்திரிகைக்குக் கதை எழுதிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. சண்டமாருதனின் மனைவிதான் சப்தரிஷியை வரவேற்றாள்.

“அப்பா! டில்லி மாமா வந்திருக்காருப்பா” என்று சண்டமாருதனுடைய ஐந்தரை வயதுப் பையன் மழலையில் குரல் கொடுத்தான். அவனுக்காகச் சாந்தினி செளக் வரை தேடிப் போய் வாங்கி வந்திருந்த ‘ட்ரை ஃப்ரூட்ஸ்’ பொட்டலங்களை அவனிடம் கொடுத்து விட்டுச் சண்டமாருதனின் அறைக்குள் நுழைந்தான் சப்தரிஷி.

“வாப்பா! எப்போ வந்தே? உன்னை எங்கோ நைஜீரியாவிலோ, லிபியாவிலோ ஹைகமிஷனராய் போட்டிட்டதாக யாரோ சொன்னாங்கள்ளே?”

“ஏண்டா பாவி! எவண்டா சொன்னான் அப்பிடி? சொன்னதுதான் சொன்னான், லண்டன், பாரீஸ், ஃபிராங்பர்ட்னு ஏதாவது நல்ல இடமாச் சொல்லியிருக்கப் படாதோ? எதுக்கு நைஜீரியாவையும், லிபியாவையும் சொன்னான்?”

“அது அவனைப் போய்க் கேட்கணும். என்னைக் கேட்டா நான் என்ன சொல்றது?”

“சரி! அப்படியே நைஜீரியாவிலோ, லிபியாவிலோ போட்டிருந்தாக் கூட நான் போய் வேலை பார்ப்பேன்னு வச்சுக்கோ. மெட்ராஸிலே நீ ‘தாம்ஸன் அண்ட் ஃபிரடரிக் ஆக்‌ஷன் கம்பெனி’யில் ஒரு தரம் ரெண்டு தரம்னு கூவிக் குவி ஏலம் போடறதை விட அது ஒண்ணும் மோசமில்லேடா.”

“நீ தெரியாமல் பேசறே. ஒரு வகையிலே இந்த ஏலக் கம்பெனி வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. என்னைச் சுத்திப் பழகற மனிதனும், ஒவ்வொரு ஏலப் பொருளும் ஒரு கதையாயிருக்கும். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணி முதல் பகல் ஒண்ணரை மணி வரை ஏலம் விடற சமயத்திலே விதவிதமான உணர்ச்சிகளும் தாபங்களும் தவிப்புகளும், நிறைந்த மனிதர்களைச் சந்திக்கிறேன் நான்.”

“பழைய பீரோக்கள், கட்டில்கள், நாற்காலிகள் ஏலம் போடற வேலையிலே இத்தனை கர்வமா?”

“கர்வத்தான். எங்க கம்பெனியிலே மரச் சாமான்கள் மட்டுமே ஏலத்துக்கு வரலை. கடிகாரங்கள்,எலக்ட்ரிகல் அயிட்டங்கள், கட்டில்கள், ஸோபா ஸெட்டுகள், சமையல் ஸ்டவ்கள் இன்னும் என்னனென்னவோ ஏலம் விட வருது. ஒவ்வொரு பண்டத்துக்கும் நம்பர் கொடுத்து லிஸ்ட் பிரிண்ட் பண்ணித் திங்கட்கிழமை முதலே அதை வர்ரவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிடுவோம். லிஸ்டிலே இருக்கிற அதே நம்பர் பண்டங்களின் மேலேயும் ஒட்டியிருக்கும். லிஸ்டை வைத்துக் கொண்டு ஏலம் எடுக்க வருகிறவர்கள் பண்டங்களைப் பார்த்து விடலாம். ஞாயிற்றுக்கிழமை காலை ஏலம் விடறப்போ நம்பரை மட்டும் சொல்லி விட்டுப் பொருளைப் பத்தி ஒரு சிறு வர்ணனை