பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

878

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கொடுப்போம். பெருங்கூட்டம் வந்திருக்கும். எங்க கம்பெனிக்கு வேண்டிய புரோக்கர்களையும் நிறுத்தி வைத்திருப்போம். அவங்க விலையை ஏத்தி விடுவாங்க. ,சமயங்களிலே பண்டங்களை ஏலத்துக்குக் கொடுத்தவங்களே வந்து ஆட்களோட நின்னு விலையை ஏத்தி விடுவாங்க. விற்கிற பண்டங்களின் விலை மேலே எங்களுக்குப் பன்னிரண்டு சதவிகிதம் கமிஷன் உண்டு.

ஏலம் எடுத்தவங்க முழுப்பணத்தையும் அன்னிக்கே கட்டணும்னு அவசியமில்லை. மொத்தத் தொகையிலே இருபத்தஞ்சு சதவீதம் உடனே கட்டினால் போதும். மீதத்தை அந்த வார இறுதிக்குள் கட்டிப் பொருளை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். இந்த ஏலத்தில் பெறுமானம், மதிப்பீடு எல்லாம் கூடவோ குறையவோ இருக்கும். நீ எங்கள் ஏலக் கம்பெனிக்கோ வேறு எந்த ஏலக் கம்பெனிக்கோ போனதில்லை என்று நினைக்கிறேன்.போய்ப் பார்த்தால் ஆச்சரியப்படுவாய். ஏழு ரூபாய் கூடப் பெறாத ஒரு கள்ளிப் பலகையிலான நாற்காலி எழுபது ரூபாய் விலைக்குப் போய் விடும். ஆக்‌ஷன் ஷாப்பிலே ஒவ்வொரு பண்டத்துக்கும் சாதாரணமான விலை ஒன்று, ஸென்டிமென்டல் விலை ஒன்று இருக்கும். ஒரு வெல்வெட் தலையணை முப்பது ரூபாய் கூடப் பெறாதது, முந்நூறு ரூபாய்க்கு ஏலம் போச்சு. அதிலே ஒரு பெரிய சோகக் கதையே இருந்ததுன்னா நீ நம்புவியோ?”

“நம்ப மாட்டேன். நீ எழுத்தாளன். அதனாலே ஏலம் போன தலையணையை வியாஜமாக வச்சுக் கொண்டு நீயே ஒரு கதை அளந்துடுவே.”

“அப்படிச் சொல்லாதே. ஒரு நாற்காலி, ஒரு கட்டில், தலையணை எல்லாமே வரலாறாக மாறிய பின்னும் அதைத் தாங்களே வாய் விட்டுச் சொல்ல முடியாத, மெளன அனுபவங்களாக ஊமைக் கதாபாத்திரங்களாக - பேச முடியாத சாட்சிகளாகவே ஏலக் கடைக்கு வருகின்றன. அவை மட்டும் பேச முடியுமானால், மனிதர்கள் சொல்லாத, சொல்லக் கூசுகின்ற எத்தனையோ அனுபவங்களை அவற்றிடமிருந்து நாம் அறியலாம். மனிதர்களின் பழைய அனுபவங்களை ஏலம் போட்டால் விற்காது. ஆனால், அவர்கள் ஆண்டு அனுபவித்த மேசை, நாற்காலி, பாத்திரம், பண்டம் எல்லாம் ஏலம் போட்டால் விற்கும்.”

“அனுபவங்களை ஏலம் போட்டு விற்கத்தான் உன்னைப்போன்ற எழுத்தாளர்கள், பிரசங்கிகள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் எல்லாரும் புறப்பட்டிருக்கிறீர்களே?”

“அப்படியானால் நான் ஒருவனே இரண்டு வகையில் ஆக்‌ஷனராக இருக்கிறேன். மனித அனுபவங்களை ஏலம் போடுகிற சண்டமாருதனை உனக்குத் தெரியும். ஆனால் மேசை, நாற்காலி, கட்டில், சோபாக்களை ஏலம் போடுகிற எஸ்.கே.வி.ரங்கசாமியை உனக்குத் தெரியாது. நீ என்னுடைய கம்பெனிக்கு வந்ததே இல்லை. நாளைக்கு என்னோடு வா. அங்கே ஒவ்வொரு சாதாரணப் பொருளுக்கும் ஒரு ‘ஸென்டிமென்டல் வேல்யூ’ இருப்பதை நீ புரிந்து கொள்ளலாம். அப்புறம் நாளை இரவு நீ ரெயிலேறுவதற்கு முன் நான் சந்தித்த ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன்.” .