பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : விதிவிலக்காக ஒரு வியாபாரம்

879

“என்னைப் பொறுத்த வரை எங்க வெளியுறவு இலாக்காவின் பால பாடமே எழுத்திலோ, பேச்சிலோ ஸென்டிமென்டல் அப்ரோச்சோ, ஸென்சேஷனல் அப்ரோச்சோ கூடாது என்பதுதான்.”

“சர்க்கார் உத்தியோகத்துக்கு அது அவசியமாயிருக்கலாமடா சப்தரிஷி! ஆனால் மனித உணர்வுகளும், மனக்கிளர்ச்சிகளுமே என் போன்ற இலக்கிய கர்த்தாக்களுக்கு ஜீவ ஊற்று. அவை இல்லாத உலகத்தில் புத்தி மட்டுமே இருக்கும். உணர்வுகளே இல்லாத புத்தி, உலகை வறளச் செய்துவிடும் புத்தி என்பது வெறும் கால்குலேஷன்தான். வேறொன்றும் இல்லே.”

“ஆனாலும், நம்மவர்கள் எப்போதும் எதிலுமே அளவுக்கு மிஞ்சி ‘ஸென்டிமென்டலாக’ இருக்கிறார்கள். அது எனக்குப் பிடிப்பதில்லை.”

“உன்னுடைய சென்டிமென்டலான ஒரு நிலைமையை நீ சந்திக்கிறவரை இப்படித்தான் மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாய்.”

“சரி! நாளைக்கு உன்னோடு ஆக்‌ஷன் ஹாலுக்கு வருகிறேன்.போதுமா?” என்றான் சப்தரிஷி. அவ்வளவில் அந்தப் பேச்சு முடிந்தது. சண்டமாருதனின் மனைவி காபி, சிற்றுண்டி கொண்டு வந்தாள். நண்பர்கள் இருவரும் காபி, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அடையாற்றில் தங்களுக்கு மிகவும் வேண்டியவனான மற்றொரு நண்பனைக் காணச் சென்றார்கள். அந்த நண்பன் சப்தரிஷி, சண்டமாருதன் இருவரையும் தன்னோடு முதல் ஆட்டம் சினிமாவுக்குக் கூப்பிட்டான். தட்டிச் சொல்ல முடியவில்லை. இருவரும் அந்த நண்பனோடு சினிமாவுக்குப் போனார்கள். கடற்கரைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்க ஆசைப்பட்டான் சப்தரிஷி, ஆனால் நண்பனின் பிடிவாதமே வென்றது.

இரவு ஒன்பதே முக்கால் மணிக்குச் சினிமா முடிந்ததும் உட்லண்ட்ஸில் போய்ச் சாப்பிட்டார்கள். சப்தரிஷி அங்கேயே தங்கியிருந்ததனால், அப்படியே தன் அறைக்குப் போய் விட்டான். அடையாறு நண்பன் தன் காரிலேயே சண்டமாருதனை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கே ஏலத்துக்குப் போக வேண்டும் என்பதால், சண்டமாருதன் சீக்கிரமே படுத்துத் தூங்கி விட்டான். வழக்கமாக இரவு ஒரு மணிக்கு மேலும் கண் விழித்து எழுதிக் கொண்டிருக்கக் கூடிய அவன் அன்று சீக்கிரமே படுத்தது அவன் மனைவிக்கே ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் காலை சரியாக ஏழரை மணிக்கே சண்டமாருதனின் வீட்டுக்கு வந்து விட்டான் சப்தரிஷி. அங்கேயே காலைச் சிறறுண்டியை முடித்துக் கொண்டு சப்தரிஷியும், சண்டமாருதனும் மவுண்ட்ரோடில் மிகவும் பிரதானமான இடத்திலிருந்த ‘தாம்ஸன் அண்ட் ஃபிரடரிக் ஆக்‌ஷன்’ ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆக்‌ஷன் ஹால் ஏலத்துக்கு வந்த பொருள்களாலேயே பிரமாதமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஏலம் கேட்க வந்தவர்கள் உட்காருவதற்கு ஏலத்துக்காக வந்த நாற்காலிகள், சோபாக்கள், பெஞ்சுகளாலேயே இடவசதிசெய்திருந்தார்கள். ஒரு