பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

880

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கோர்ட்டில் நீதிபதி ஆசனம் எவ்வளவு உயரத்தில் இருக்குமோ, அவ்வளவு உயரத்தில் அதே அமைப்பில் ஏலம் கூறுகிறவரின் ஆசனம் இடப்பட்டிருந்தது. நவநாகரிகப் பெண்கள், பழங்கால மடிசார் மாமிகள், முதியவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், குடும்பஸ்தர்கள் என்று கூட்டம் அங்கே அலை மோதியது. ஆக்‌ஷன் ஹால் வாசலில் அன்றைக்கென்றே சில தற்காலிக டீ, கோகோ கோலா ஸ்டால்கள் முளைத்திருந்தன. சில வெளிநாட்டுக்காரர்கள் கூடக் கூட்டத்தில் தென்பட்டனர். மிகச் சமீப காலத்து ஃபேஷன்களையும் அந்தக் கூட்டத்தில் காண முடிந்தது. லுங்கி,பெல்பாட்டம், ஜீன்ஸ் அணிந்த பெண்கள் கூட அங்கே ஏலம் கேட்க வந்து உட்கார்ந்திருந்தனர்.

சரியாக எட்டு அடித்து இருபத்தொன்பதாவது நிமிஷத்தில் ஏலம் கூறுவதற்காகச் சண்டமாருதன் நீதிபதி ஆசனம் போல் உயரத்தில் இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். பக்கத்தில் சற்றே தணிவான இருக்கையில் ஏல விவரங்களைக் குறித்துக் கொள்வதற்காக மற்றொருவர் அமர்ந்தார்.

ஏலம் ஆரம்பமாயிற்று. சண்டமாருதனின் கண்களும், வாயும் சுறுசுறுப்பாகப் பார்த்தன; பேசின. இருநூறு ரூபாய் ஒரு தரம், இரண்டு தரம் என்பது போல் அவனுடைய வெண்கலக் குரலில் கூவி, அவ்வளவு பெரிய கூட்டத்தில் எந்த மூலையில், யார் எதைச் சொல்லி விலையை உயர்த்தி விட்டாலும், அந்தப் பக்கம் விரைந்து பார்வையைப் பாய்ச்சி அவர்களைக் கண்டுகொள்ளும் விரைவு எல்லாம் அதிசயிக்கத்தக்க வேகத்தில் இருந்தன. சண்டமாருதன் அஷ்டாவதானம் செய்தான். துரிதமாக இயங்க வேண்டிய பல காரியங்கள் அடங்கிய வேலையாகிய அந்த ஏலத்தை, ஒரு சிறு பதற்றமும் இல்லாமல் மிகவும் அநாயாசமாகச் செய்தான் சண்டமாருதன்.

ஆக்‌ஷன் பட்டியலில் 647 அயிட்டங்கள் போட்டிருந்தன. அவ்வளவும் எட்டரை மணியிலிருந்து பகல் ஒன்றரை மணிக்குள் ஏலம் போட்டு முடிக்கப்பட்டு விட்டன. பதினொன்றரை மணிக்கே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது.

முதலில் கடிகாரத்தில் தொடங்கி, எலெக்ட்ரிக்கல் சாமான்கள், சமையல் ஸ்டவ்வுகள், குக்கர்கள் எல்லாம் ஏலம் போடப்பட்ட பின் பன்னிரண்டரை மணிக்கு மரச் சாமான்கள் ஏலத்துக்கு வந்தன. மரச்சாமான்களே அதிகம். அப்படியிருந்தும் ஏலம் ஒன்றரை மணிக்கே முடிந்துவிட்டது.

ஏலம் முடிந்ததும் சப்தரிஷியைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றான் சண்டமாருதன். சாப்பாடு முடிந்ததும், “நேத்துச் சொல்லியிருந்தேனே, அந்தக் கதையை இப்போது கேட்கிறாயா?” என்று சண்டமாருதனே தொடங்கினான். சப்தரிஷியும் கதை கேட்கச் சம்மதித்தான்.

“எனக்கு ‘சென்டிமென்ட்ஸ்’ எதுவும் இல்லே. ஆனாலும் உன்னுடைய ஸென்டிமெண்டல் கதையைக் கேட்க ஆட்சேபணை கிடையாது” என்றான்.

“நீ செண்டிமென்டல் ஆசாமியா, இல்லையா என்பதைக் கதையை நான் முடித்ததும் பார்ப்போமே!” என்று சொல்லி விட்டுக் கூறத் தொடங்கினான் சண்டமாருதன்.