பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : விதிவிலக்காக ஒரு வியாபாரம்

881

“இரண்டு மாசத்துக்கு முன்னே சென்னை அடையாறு பகுதியிலிருந்த சோமாபுரம் அரண்மனையை இடித்து, அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே, அப்போது அந்த அரண்மனையைச் சேர்ந்த கட்டிடங்கள், அவுட் ஹவுஸ்கள் ஆகியவற்றின் மரச்சாமான்கள், லஸ்தர் விளக்குகள், சுவர்க் கடிகாரங்கள், அலங்காரக் கதவுகள்,கட்டில்கள், வெல்வெட் மெத்தைகள், அபூர்வ வேலைப்பாடு அமைந்த தலையணைகள் எல்லாமே எங்கள் கம்பெனி மூலமே ஏலத்துக்கு வந்தன. அந்தப் பண்டங்கள் ஏலத்துக்கு வந்து, நாங்கள் அவற்றுக்கு நம்பர் கொடுத்து லிஸ்ட் போட்டு ஒரு விசேஷ விளம்பரத்தையும் பத்திரிகைகளில் கொடுத்தோம். ‘அருமையான’ வேலைப்பாடுகள் அடங்கிய சோமாபுரம் அரண்மனைப் பொருள்கள் ஏலத்துக்கு வருகின்றன என்று விளம்பரப்படுத்திய மறுநாளிலிருந்து பொருள்களைப் பார்ப்பதற்கே ‘தாம்ஸன் அண்ட் பிரடெரிக் ஆக்‌ஷன்’ ஹாலில் கூட்டம் அலை மோதிற்று.

“சோமாபுரம் ஆந்திராவில் ஒரு பழைய சமஸ்தானம் என்பது உனக்குத் தெரியும். பாலஸ் ‘பர்னிச்சர்ஸ்’ ஏலம் பற்றி நாங்கள் விளம்பரம் செய்த மறுநாளிலிருந்தே எங்களுக்கு ஹைதராபாத், விஜயவாடா, கர்நூல் என்று எங்கெங்கிருந்தோ டிரங்க் கால்கள் வந்தன. பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து சில சினிமா ஸ்டூடியோ உரிமையாளர்கள், சில பெரிய ஹோட்டல் அதிபர்கள் கூட அந்த ஆக்‌ஷன் நடக்கிற போது சென்னை வந்து தங்களுக்குத் தேவையானவற்றை ஏலம் எடுக்கப் போவதாகக் கூறி ஃபோன் செய்திருந்தார்கள். சோமாபுரம்அரண்மனைப் பொருள்கள் காரணமாக எங்கள் கம்பெனியே பரபரப்பு அடைந்திருந்தது. ஒரே டிரங்க் கால்கள், விசாரணைகள், பிரமுகர்களின் விஜயங்கள் என்று கம்பெனியே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அரண்மனைக் கட்டில்களில் விரித்திருந்த பெட்ஷீட், பெர்ஸியன் கம்பளங்கள் எல்லாம்கூடப் பல ஆண்டுகள் ஆகியும், புத்தம் புதியனவாக அப்படியே இருந்தன. அவற்றுக்கே ஏகப்பட்ட போட்டி இருந்தது.

“அரண்மனைப் பண்டங்களை எங்கள் ஆக்‌ஷன் ஹாலில் அடுக்கவே மூன்று நான்கு நாட்கள் பிடித்தன. மற்றவற்றை ஒதுக்கி விட்டு அவற்றை நன்றாக ‘டிஸ்பிளே’ செய்ய வேண்டியிருந்தது. அந்த ஆக்‌ஷனுக்குச் சில மந்திரிகள், கவர்னர், அந்நிய நாடுகளின் துாதர்கள் கூட வருவார்கள் என்று எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனால் ஏலக் கூடத்தைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க நாங்கள் பெருமுயற்சி செய்தோம். அந்த அரண்மனையது அரச பரம்பரையின் உறவினர்கள், நண்பர்கள் கூட அப்பொருள்களில் மிகவும் அக்கறை காட்டினர். அதிகார பூர்வமாக ஏலம் நடப்பதற்கு முன்பிருந்தே, ‘இதை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். எவ்வளவு விலையானாலும் தருகிறேன்’ என்று கேட்டு ஒவ்வொரு பண்டத்துக்கும் கிராக்கி இருந்தது. எங்கள் கம்பெனிச் சட்டமோ, எந்தப் பொருளையும் ஏலம் போட்டு மட்டுமே விற்பது என இருந்தது.

“இருந்தும் சில சமயங்களில் அதை மீறி விதிவிலக்காக சில விற்பனைகளைச் செய்திருக்கிறோம். ஏலம் போட்டு விற்றது போலக் கணக்கில் எழுதிக் கொண்டு ஏலம்
நா. பா. II — 17