பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

882

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

போடாமலேயே அவற்றை விற்றிருக்கிறோம். ஆனால், இந்தச் சோமாபுரம் அரண்மனைப் பொருள்களுக்கு ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் போலத் தோன்றியதால், கம்பெனி டைரக்டர் போர்டே விசேஷக் கூட்டம் நடத்தி எல்லாப் பொருளையும் கண்டிப்பாக ஏலம் கூறியே விற்பது” என்று முடிவு எடுத்து அறிவித்து விட்டது.

ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்த்த அந்த ஏலத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. ஞாயிறன்று ஏலம் என்றால், வியாழக்கிழமை பிற்பகல் இரண்டரை மணிக்கு ஒரு விநோதமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

பொருள்களைப் பார்க்க வந்த கூட்டத்தினிடையே ஒரு முதிய தெலுங்கர் அரண்மனைக் கட்டில்கள் வைத்திருந்த பகுதியில் ஒரு கட்டிலில் உட்கார்ந்து தலையணையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாரென்றும், கம்பெனி ஊழியர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அவர் கட்டிலிலிருந்து எழுந்திருக்க மறுக்கிறார் என்றும், என் அறையில் வந்து எனக்குத் தகவல் கூறப்பட்டது. உடனே எங்கள் கம்பெனி ஜெனரல் மானேஜர் ஜம்புநாதன் போலீஸுக்குப் போன் செய்யலாம் என்றார்.

நான் அப்படிச் செய்யக்கூடாது என்றேன். ‘நானே போய்ப் பார்த்துப் பேசி அந்த ஆளைக் கிளப்பி வெளியேற்றுகிறேன். போலீஸ் எதற்கு?’ என்று கூறி விட்டு எங்கள் அலுவலக அறையிலிருந்து ஆக்‌ஷன் ஹாலில் அரண்மனைக் கட்டில்கள் வைத்திருந்த இடத்துக்கு விரைந்தேன் நான்.

அங்கே ஒரேயடியாகக் கூட்டம் கூடியிருந்தது. சுமார் அறுபத்தெட்டு வயது மதிக்கத்தக்க ஆஜானுபாகுவான ஓர் ஆந்திரக்காரர் கட்டிலில் அமர்ந்து, அதில் இருந்த வெல்வெட்டுத் தணையணையை நெஞ்சோடு அணைத்தபடி கண்களில் நீர் சோர வீற்றிருந்தார். அவரை முதற்பார்வையிலேயே ஒரு பழைய நாடக நடிகர் அல்லது கலைஞர் என்று அனுமானிக்க முடிந்தது. ஆனால், அவரிடமே கேட்டதில், என் அனுமானம் பொய்த்து விட்டது. அவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று மட்டும் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார். பெயர், ஊர் எதையும் சொல்ல மறுத்து விட்டார். பதில் கூறுமுன் பாதியிலேயே மறுபடி அழ ஆரம்பித்து விட்டார்.ஆனால், அதே கூட்டத்தில் இருந்த மற்றோர் ஆந்திர சகோதரர் என்னைக் கூப்பிட்டு,’அவர் வெறும் கல்லூரி ஆசிரியர் மட்டும் இல்லை. ஆந்திராவில் பெரிய கவி. பூர்வீகத்தில் சோமாபுரம் அரண்மனையோடு தொடர்புடையவர். பாவம்' அவரை ஒன்றும் தொந்தரவு செய்து விடாதீர்கள்’ என்றார்.

‘தொந்தரவுசெய்யாமல் எப்படி? பொது இடத்தில் இப்படிநியூசன்ஸாக…’ என்று நான் பதிலுக்கு அவரைக் கேட்டாலும், என் மனத்தில் ஓர் அனுதாபம் சுரந்து விட்டது.

“யாருக்கும் இடையூறு இல்லாமல் பத்து நிமிஷம் உட்கார்ந்து விட்டு எழுந்து போகா விட்டால், நாங்கள் அவரை வெளியேற்ற வேண்டியதாகி விடும்.”