பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : விதிவிலக்காக ஒரு வியாபாரம்

883

“பாவம் ஒன்றும் செய்யாதீர்கள். அவரே எழுந்து போய் விடுவார்” என்றார் முதலில் பேசிய மனிதர்.

“ஆனால், மாலையில் கடை அடைக்கிற வரை அந்த ஆள் எழுந்திருக்கவில்லை. முரட்டடியாக அவரை எழுப்பவும் எனக்கு மனம் வரவில்லை. யாருடனும், எதுவும் பேசாமல் நினைவுகளை எங்கோ உலாவ விட்டவர் போல் மோட்டு வளையைப் பார்த்தபடி தலையணையை அணைத்துக் கொண்டு ஆடாமல், அசையாமல் வீற்றிருந்தார் அவர். அவரது உடலில் முதுமையைக் கழித்து விட்டுப்பார்த்தால், பால்ய வயதில் அவர் அதி செளந்தர்யவானாக விளங்கியிருக்க வேண்டும் என்று உய்த்துணர முடிந்தது.

“இரவு மணி ஏழு. எங்கள் ஆக்‌ஷன் கம்பெனி மானேஜர் மறுபடி போலீஸைக் கூப்பிடலாம் என்றார். ஏழரைக்குக் கடை அடைப்பது வழக்கம். கடை அடைப்பதற்குள்ளாவது அந்த ஆளை வெளியேற்ற வேண்டுமே.”

“தயவு செய்து போலீஸைக் கூப்பிட வேண்டாம். வாட்ச்மேன் மட்டும் இருக்கட்டும். நீங்கள் எல்லோரும் போகலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அவர் ஆந்திராவில் பெரிய கவியாம். ஒரு கவியை நாம் அவமானப்படுத்தி விடக் கூடாது. நான் இதமாகச் சொல்லி வெளியேற்றுகிறேன்” என்று நான் பொறுப்பேற்றுக் கொண்டு மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கடையில் கூட்டம் குறைந்து, தனிமை வாய்த்தது.

ஆக்‌ஷன் ஹாலைப் பூட்டுவதற்காக ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியே கதவருகே காத்திருந்தான். கடைக்குள் என்னையும், அந்தக் கிழட்டுத் தெலுங்குக் கவியையும், அரண்மனைப் பொருள்களையும் தவிர வேறு யாரும் இல்லை.

“ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அந்த விஷயத்தை மிகவும் சிரத்தையோடும் பொறுமையோடும் கவனித்தேன் நான். சிறிதுநேரத்தில் அந்தக் கவி தலையணையை நெஞ்சில் அணைத்தபடியே கட்டிலிலிருந்து எழுந்திருந்து, அரண்மனை ஓவியங்கள் அடுக்கப்பட்டிருந்த பகுதிக்குப் போய், அங்கே நிலைக் கண்ணாடி உயரத்துக்கு இருந்த சோமாபுரம் இளவரசியான விஜய செளந்தர்யா தேவியின் அழகிய ஓவியத்தின் முன் பித்துப் பிடித்தவர் போல நின்றார். ஒரு தெலுங்குக் கவிதையை உரத்த குரலில் பாடினார். எனக்குக் கொஞ்சம் தெலுங்கு மொழி தெரியுமாகையினால், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அர்த்தம் என் மனத்தை உருக்கியது.”

“உனது வைகறைகளிலும், இரவுகளிலும், வசந்தங்களிலும், பனிக்காலங்களிலும், சுகங்களிலும், துக்கங்களிலும், வாழ்விலும், மரணத்திலும் நான் அருகே இல்லா விட்டாலும், என் நினைவுகளை நீ உன் அருகிருத்திக் கொள். உனது விழிப்புகளில் நான் ஒரு கனவு. உனது கனவுகளில் நான் ஒரு விழிப்பு. உனது தலையணையில் என்னுடைய நினைவுகளால் நீ சிந்தும் கண்ணீர் நனையும் போது, எங்கோ தவிக்கும் என் சூடான இதயம் அதில் குளிரும்” என்ற பொருளுள்ள கவிதை அது.