பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

884

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

”பின்பு ஏதோ ஒரு தீர்மானத்துடன் (மன அமைதியுற்றவர் போல்) என் பக்கம் திரும்பி, ‘தயவுசெய்து என்ன விலையானாலும் இந்த ஓவியத்தையும், இந்தத் தலையணையையும் இப்போதே எனக்கு விற்க முடியுமா?’ என்று கெஞ்சுகிற குரலில் கேட்டார் அவர்.

“முதல் முதலாக என்னிடம் அந்த முதியவர் அப்போதுதான் வாயைத் திறந்து பேசினார்.

“எங்கள் கம்பெனி விதிப்படி, எதை விற்பதானாலும் ஏலம் கூறித்தான் விற்க முடியும். ஞாயிறு காலை எட்டரை மணிக்கு ஏலம். நீங்களே வந்து இதை ஏலம் கேட்டு எடுக்கலாமே?” என்றேன்.

“என்னை விரும்பாத இதே அரச குடும்பத்துக்கு வேண்டிய வேறு பலருங் கூட அந்த ஏலத்துக்கு வருவார்கள். ஏலம் எவ்வளவு உயர்ந்து போனாலும், அவர்கள் நான் இவற்றை எடுக்க முடியாதபடி விலையை மேலே, மேலே தூக்கி விட்டு விடுவார்கள். என் மேல் அவ்வளவு கோபம் அவர்களுக்கு வரக் காரணம் உண்டு. என்னை எண்ணித் தவித்துத் திருமணமாகாமலேயே மாண்டாள் இவள். இவளை எண்ணித் தவித்துப் பிரம்மசாரியாகவே மூத்துக் கவியாகித் திரிகிறேன் நான். இதற்குமேல் எங்கள் அந்தரங்கங்களை நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. இவள் கிடைக்காததால், நான் கவியானேன். நான் கிடைக்காததால் இவள் பிணமானாள்.”

அவரது பேச்சு உணர்ச்சி வசமாகி மறுபடியும் அழுகையில் போய் முடிந்தது.

ஒரு கவி என்பவன் ரசிக்கத்தக்கவன்; அவன் செண்டிமென்டலாக இருக்கும் போதோ, மேலும் ரசிக்கத் தக்கவனாகி விடுகிறான். அவருடைய நிலை என்னை மனமிளகச் செய்து விட்டது. கம்பெனி சட்ட திட்டம், வியாபார நேரம் முடிந்து விட்டதே என்ற நிலை எல்லாவற்றையும் மறந்தேன்; அந்தத் தலையணையும், அந்த ஓவியமும் என்ன விலைக்கு ஏலத்தில் போக முடியுமோ அந்த விலையைச் சொல்லி அவருக்கு விற்று விட்டுத் தேதி போடாமல் ரசீதும் கொடுத்துப் பணம் வாங்கியாயிற்று. அவர் அவற்றை எடுத்துக் கொண்டு போக ஒரு டாக்சி கொண்டு வரச் சொல்லி வாட்ச்மேனையும் அனுப்பி வைத்தேன். அவர் என்னை வெகுவாக வியந்து பாராட்டினார்.

“என் வரலாற்றைக் கேட்டு விசாரித்துத் தொந்தரவு செய்யாமல் என் கோரிக்கையை மதித்து விதி விலக்காக இவற்றை எனக்கே விற்ற உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?”

“நன்றி எதுவும் சொல்ல வேண்டாம். உங்கள் சோகக் கதை எனக்குப் புரிகிறது. நீங்கள் ஒரு கவி. நான் ஒரு கதாசிரியன். கவிகளுக்கு இலக்கணமே கூட விதி விலக்குத் தருகிறது. வளைந்து கொடுக்கிறது. விட்டுக் கொடுக்கிறது. வியாபாரம் விதி விலக்குத் தருவதா பெரிது? போய் வாருங்கள்.” என்றேன்.