பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி :.விதிவிலக்காக ஒரு வியாபாரம்

885

அவரையும், படங்களையும் ஒரு பெரிய டாக்சியில் ஏற்றி விட்டு விட்டு, அன்றிரவு நான் கடையைப் பூட்டும் போது இரவு மணி ஒன்பது. ‘இன்டர்ஸ்டேட் லைசென்ஸ்’ உள்ள அந்தப் பெரிய டாக்சியை அவர் ‘விஜயவாடா வரை வர முடியுமோ?’ என்று கேட்டுக் கொண்டிருந்த போதுதான், நானும் வாட்ச்மேனும் ஏலக்கடையைப் பூட்டி விட்டுப் புறப்பட்டோம்.

பின்பு மறுநாள் என்னுடைய இந்தச் செயல் கம்பெனி மானேஜிங் டைரக்டர் வரை போயிற்று. கூப்பிட்டு என்னைக் கடுமையாக விசாரித்தார்கள்.

நான் நடந்ததைச் சொன்னேன்; அவர் அந்த இளவரசி படத்தின் முன் பாடிய கவிதையை விவரித்தேன்; ‘கவிகள் விதி விலக்கானவர்கள், அவர்களுக்கு எந்த விதியும் பொருந்தாது. எந்த விதியும் அவர்களைக் கட்டுப்படுத்தாது; உங்கள் தாம்ஸன் அண்ட் பிரடெரிக் ஆக்‌ஷன் கம்பெனியின் விதி மட்டும் எம்மாத்திரம்?’

ரசிகத் தன்மை உள்ள எங்கள் கம்பெனி மானேஜிங் டைரக்டர் என்னை உடனே மன்னித்து விட்டார். இந்த ஆக்‌ஷன் கம்பெனியில் வேலைக்கு வந்ததிலிருந்து நான் அடைந்த மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவம் இது” என்று சண்டமாருதன் கூறியதும், “நன்றாகத்தான் இருக்கிறது. எங்கே, அந்த தெலுங்குக் கவிதையின் சுருக்கத்தை இன்னொரு தடவை சொல்லு! பார்க்கலாம்.பொருள் நிறைந்து, அழகாக இருக்கிறதே” என்று ஆவலோடு கேட்டான் நண்பன் சப்தரிஷி.

“உனது வைகறைகளிலும், இரவுகளிலும், வசந்தங்களிலும், பனிக்காலங்களிலும், சுகங்களிலும், துக்கங்களிலும், வாழ்விலும், மரணத்திலும், நான் அருகே இல்லாவிட்டாலும், என் நினைவுகளை நீ உன் அருகிருத்திக் கொள். உனது விழிப்புகளில் நான் ஒரு கனவு. உனது கனவுகளில் நான் ஒரு விழிப்பு. உனது தலையணையில் என்னுடைய நினைவுகளால் நீ சிந்தும் கண்ணீர் நனையும் போது, எங்கோ தவிக்கும் என் சூடான இதயமும் அதில் குளிரும்.” .

இதைக் கேட்டுச் சண்டமாருதனின் நண்பன் சப்தரிஷி, சில நிமிஷங்கள் அப்படியே மிகவும் உணர்ச்சி வசப்பட்டுச் சென்டிமெண்டலாகி ஒன்றும் பேசத் தோன்றாமல் கண் கலங்கி அமர்ந்திருந்தான்.

(கலைமகள், தீபாவளி மலர், 1974)