பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120. மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்

மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அரசுப்பட்டியில் ஒரு புதிய அரசாங்கப் பெண்கள் கலைக் கல்லூரிக்கான விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களைக் கோரிப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளிவந்திருந்தன.

அந்தக் கல்லூரி புதிதாக மே மாதம் பதினைந்தாம் தேதி மாண்புமிகு அமைச்சரொருவரால் திறந்து வைக்கப்பட இருந்தது. ஏப்ரல் 10ந் தேதி விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க இண்டர்வியூக்கு நாள் குறித்திருந்திருந்தார்கள். கட்டிடங்கள் போதுமான அளவு உருவாகவில்லை என்றாலும், கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட நாற்பது ஏக்கர் நிலத்தில் சில கூரை ஷெட்டுகளை அவசர அவசரமாக அமைத்துக் கல்லூரியைத் தொடங்க இருந்தார்கள். இந்த அவசரத்திற்குக் காரணம் ஜூலை மாத நடுவில் அந்த வட்டாரத்தில் பாராளுமன்ற உபதேர்தல் ஒன்று நடக்க இருந்தது. அந்த உபதேர்தலில் வெற்றி பெறக் காரணமாக, அங்கே தாங்கள் சாதித்திருக்கும் சாதனைகளின் பட்டியலில் இந்தப் பெண்கள் கல்லூரியும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தான் அரசாங்கம் இதற்கு இவ்வளவு தவித்துப் பறந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த வட்டாரத்தில் அதிகமாக வசித்த ஒர் இனத்தையும் அந்த இனத்தின் ஏராளமான வாக்காளர்களான பெண்கள் ஒட்டையும் கவருவதற்காக முன்கூட்டியே இது திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் மட்டும் வரவில்லை என்றால், அங்கே அவ்வளவு அவசரமாகக் கல்லூரி வந்திருக்காது. இண்டர்வியூவை எதிர்பார்த்து விண்ணப்பித்திருந்தவர்களில் மாயாண்டி அம்பலத்தின் பேர்த்தி முத்தம்மாளும் ஒருத்தி, அவள் முந்திய ஆண்டுதான் பக்கத்தில் அறுபது மைல் தொலைவிலுள்ள பெரிய நகரின் பெண்கள் கல்லூரி ஒன்றில் படிப்பை முடித்துத் தமிழ் எம்.ஏ. தேறி அரசுப் பட்டிக்கு வந்து ஒரு வருடகாலம் வேலையில்லாமல் இருந்தாள்.

முத்தம்மாள் தாத்தாவிடம் வளர்ந்தவள். முத்தம்மாளுக்கு ஐந்து வயதாயிருந்தபோது அவள் தகப்பன் இரவில் பருத்திக் காட்டுக் காவலுக்குப் போயிருந்த இடத்தில் வரப்பு மேட்டில் வைத்து இரவோடிரவாகச் சில ஜன்ம விரோதிகளால் தூங்கும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்டான். அதனால் விதவையான மாயாண்டி அம்பலத்தின் ஒரே மகள் குழந்தையோடு தகப்பன் வீடு வந்து சேர்ந்தாள்.ஒரே மகள் வயிற்றுப் பேத்தியைச் செல்லமாக வளர்த்துப் படிக்க வைத்தார். முத்தம்மாள் தைரியத்தில் தன் தந்தையைக் கொண்டிருந்தாள். அவளுடைய பள்ளிப் பருவத்தில் ஒரு நாள் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது வழியில் கண்ட நல்ல பாம்பு ஒன்றைப் பயப்படாமல் துரத்தி அடித்துக் கொன்று மூங்கில் கழி நுனியில் அடித்த