பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்

887

பாம்புடன் தாத்தாவுக்கு முன் தோன்றி பாராட்டுப் பெற்றிருக்கிறாள் அவள். சிறு வயதில் பயம் என்பதே என்னவென்று அறியாமல் வளர்ந்தவள் அவள்.

“அப்பனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது. ஆனால், பெண்ணாகப் பிறந்திருக்கே” என்று தாத்தா மாயாண்டி அம்பலம் வாய்க்கு வாய் அவளைப் பற்றிச் சொல்லி வியப்பது வழக்கமாயிருந்தது.

“அதுதான் எனக்கு பயமாயிருக்கு அப்பா! அவரு அத்தினி அடாவடித்தனமா நிமிர்ந்து இருந்ததுனாலேதான் பருத்திக் காட்டிலே தூங்கறப்போ நாலஞ்சு பேராச் சேர்ந்து சதி பண்ணிக் கொன்னுட்டாங்க. இந்தப் பெண்ணுக்கும் அதே தைரியம் இருக்குதே, எப்படி ஆகுமோ, என்ன ஆகுமோன்னு எனக்கே பயமாயிருக்குது அப்பா” என்பாள் முத்தம்மாளின் தாய்.

பருவம் அடைந்த பின்பு முத்தம்மாளுடைய அழகும், தைரியத்தோடு போட்டி போட்டுக் கொண்டு செழித்திருந்தது. பாயத் தயாராக நிற்கும் அரபிக் குதிரை மாதிரி மதமதவென்று வளர்ந்து விட்டாள் முத்தம்மாள். நல்ல உயரம். வாளிப்பான அங்கங்கள். குறுகுறுப்பான விழிகள். துறுதுறுப்பான முகம். வெள்ளை வெளேரென்ற அளவான பல் வரிசை. கணீரென்ற குரல், அவளைப் பார்க்கிற எந்த ஆண் பிள்ளையும் இன்னொரு முறை திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போக வேண்டுமென்ற நப்பாசையைத் தவிர்க்கவே முடியாது. நடந்து வரும் போதோ அவள் அழகைச் சொல்லி மாளாது. அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரோ, கோபுரமோ புறப்பட்டு வருவது போல எடுப்பாக இருக்கும். முடிந்தாலும், அவிழ்ந்து தொங்கினாலும் எடுப்பான நீண்ட கருங்கூந்தல், ஆற்றில் அலையோடி வற்றிய இடத்துக் கருமணல் போல், எண்ணெய்ப் பளபளப்புடன், நெளிநெளியாக மின்னும் அவள் கூந்தற் கருமை மனத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மையை உடையது. ஏற்பட இருந்த அரசப்பட்டி அரசினர் பெண்கள் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள் அவள். ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி இண்டர்வியூவிற்கு முன்பே பிரின்ஸிபாலாக கல்வி மந்திரிக்கு மிகவும் வேண்டியவரென்று சொல்லப்பட்ட ஓர் அம்மாள் நியமிக்கப்பட்டு விட்டார்.

மற்றப் பதவிகளுக்கு இண்டர்வியூ செய்ய மூவர் கொண்ட குழு ஒன்றை அரசாங்கம் நியமித்திருந்தது. பிரின்ஸிபாலாக நியமிக்கப்பட்டிருந்த அம்மாள் தவிர, அரசுப்பட்டி வட்டார எம்.எல்.ஏ. அரசை, அத்தியழகன், பல்கலைக்கழகப் பிரதிநிதியாக ஒருவர் ஆக மூவர் ஏப்ரல் 10ந் தேதி அரசப்பட்டி டிராவலர்ஸ் பங்களாவில் அந்த இண்டர்வியூவை நடத்தினர். காலை பத்து மணிக்கு இண்டர்வியூ தொடங்கியது. ஏப்ரல் மாதம் ஆகையால் வெய்யில் கடுமையாக இருந்தது வெளியேதான். உள்ளே அந்த டிராவலர்ஸ் பங்களாவில் இரண்டு முறை முதலமைச்சர் வந்து தங்கியிருந்ததனால், அவருக்காக சர்க்கார் செலவில் அது ஏர்க்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது.