பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

888

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

முதலில் மற்ற மற்றப் பாடப்பிரிவுகளுக்கான விரிவுரையாளர்களின் இண்டர்வியூ முடிந்ததும், பதினொன்றரை மணிக்குத் தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். மொத்தம் பதினாறு பெண்கள், அதற்காக விண்ணப்பித்திருந்தனர். அந்தப் பதினாறு பேரிலும் பார்க்க எடுப்பாக அழகாக இருந்தவள் முத்தம்மாள் மட்டும்தான். மற்றப் பதவிகளுக்கு இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் சொன்ன அபிப்பிராயத்திலிருந்து பிரின்ஸிபால் அம்மாளுக்கோ, பல்கலைக்கழகப் பிரதிநிதியாக வந்திருந்த முதியவர் ஒருவருக்கோ அதிகம் செல்வாக்கு இல்லை என்றும் எம்.எல்.ஏ.வான அரசை அந்தியழகன்தான் அதில் செல்வாக்குள்ள புள்ளி என்றும் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அரசை அந்தியழகன் சிபாரிசு செய்கிற நபருக்கு வேலை நிச்சயமாகக் கிடைக்கும் என்று தெரிந்தது. அதை ஒட்டி அரசை அந்தியழகனை எப்படி திருப்திப்படுத்துவது என்ற முணுமுணுப்பான பேச்சுக்கள், விமரிசனங்கள் வெளியே காத்திருந்தவர்களிடையே சில கணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஒவ்வொருவராகக் காத்திருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். முதலில் உள்ளே போய் விட்டு வந்த பெண் வெளியே திரும்பி வந்ததும் சொன்னாள் : “எம்.எல்.ஏ. சார் ஒண்ணுமே கேட்கலை. பிரின்ஸிபால் அம்மாள் ஒரு கேள்வியும், பல்கலைக்கழகப் பிரதிநிதி ஒரு கேள்வியுமாக இரண்டு கேள்வி கேட்டு விட்டுப்போகச் சொல்லி விட்டார்கள்” - இரண்டாவதாக உள்ளே போய் விட்டு வந்த பெண், “எம்எல்ஏ. சார் வகுப்புக்கு எப்படிக் கவர்ச்சியாக உடையணிந்து செல்வீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டார். “நீங்க எப்படி அணிந்து போகச் சொல்றீங்களோ, அப்படி அணிந்து கொண்டு போகிறோம் சார்” என்று நான் பணிவாகப் பதில் சொல்லிவிட்டு வந்தேன்” என்றாள்.

முத்தம்மாள் உள்ளே போன போது அரசை அந்தியழகன் அவளையே வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்த்தான். மற்ற இருவரும் ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள். முத்தம்மாள் பதில் சொன்னாள். அரசை அந்தியழகன்,”உங்கப்பா பேரு என்னம்மா? அவரு என்ன செய்யிறாரு?” என்று முத்தம்மாளை ஒரே கேள்வி மட்டும் கேட்டான்.

“எங்கப்பா இல்லே. இறந்து போயிட்டாரு. அம்மாவும் தாத்தாவும்தான் இருக்காங்க” என்றாள் அவள்.

அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. அவள் அவனைப் பார்த்து ஓரளவு அருவருப்பு அடைந்தாள். அவன் முகம் எருமை மாட்டின் மூஞ்சியைப் போலிருந்தது. மேலே தலை சிறுத்துக் கீழே வர வரப் பீப்பாய் போன்ற உடலுடன், எருமைத் தலையைப் பீப்பாயில் ஒட்ட வைத்து, அதற்குக் கையும் காலும் முளைக்கச் செய்தது போல இருந்தான் அரசை அந்தியழகன். இண்டர்வியூ முடிகிற வரை அவனுடைய மாட்டு முழிகள் இரண்டும் அவளது உடலிலேயே லயித்திருந்தன. இண்டர்வியூ முடிந்து, அவள் வெளியேறும் போதும், “நீ கொஞ்சம் வெளியே இரும்மா!