பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்

889

போயிடாதே, உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று அவளிடம் சொன்னான் அந்தியழகன்.

அவள் நம்பிக்கையோடு வெளியே வந்து காத்திருந்தாள். அப்படிக் காத்திருந்த போது தனக்கு அந்த வேலை கிடைக்காது என்று தானே நினைக்கும்படியாகச் சில விஷயங்கள் அவளுக்குத் தெரிந்தன. தன்னோடு இண்டர்வியூ செய்யப்பட்ட பிற பதினைந்து பேரில் மூன்று முதல் வகுப்பு எம்.ஏ.க்களும், ஆறு இரண்டாம் வகுப்பு எம்.ஏ.க்களும் இருக்கும் போது சாதாரணமாக மூன்றாம் வகுப்பில் எம்.ஏ. தேறியிருந்த தனக்கு அது கிடைக்குமா என்ற சந்தேகம் அவளுக்கே வந்து விட்டது. ஆனாலும், எம்.எல்.ஏ. இருக்கச் சொல்லி வேண்டியிருப்பது அவளுக்கு நம்பிக்கையூட்டியது. தன் குடும்பமும், தாத்தாவும், அம்மாவும் இருக்கிற கஷ்ட நிலைமையில் ஐநூறு ரூபாய்க்கு மேலாக வருமானமுள்ள ஓர் உத்தியோகம் உள்ளூரிலேயே தனக்குக் கிடைத்தால், எவ்வளவு செளகரியமாக இருக்கும் என்று எண்ணினாள் அவள்.

இண்டர்வியூ அநேகமாக முடிந்தது. மற்றவர்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டு விட்டனர். எம்.எல்.ஏ. அரசை அந்தியழகன் வெளியே வந்தான்.

முத்தம்மாளை மட்டும் தனியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று சிரித்துச் சிரித்து நயமாகப் பேசினான் எம்.எல்.ஏ. அவள் என்ன சாதி என்பதை விசாரித்தான். சாதியைச் சொன்னவுடன், “அடேடே! நீ நம்ம வகையறாவைச் சேர்ந்த பொண்ணுன்னு சொல்லு, கவலையே படாதே. இண்டர்வியூ எல்லாம் சும்மா கண்துடைப்புக்குத்தான். நான் சொல்ற ஆளுக்கு இங்கே ஆர்டர் போடுவாங்க. நீ இன்னிக்குச் சாயங்காலமே ஏழு ஏழரை மணிக்கு இங்கே வந்து ஆர்டரை நேரே வாங்கிப் போய் விடு. எங் கையாலேயே உங்கிட்டத் தர்ரேன்.”

“தபால்லே அனுப்பிடுங்களேன் சார்.”

“அட நீ வாம்மா. கரும்பு தின்னக் கூலியா?”

“அப்போ நாளைக்கு காலையிலே நேரே வந்து வாங்கிக்கிறேனே சார்”

“நாளைக்கா? நாளைக்கு என்னை நீ இங்கே பார்க்கவே முடியாது. இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணி ரயில்லே நான் மெட்ராஸ் போயாகணும். நாளைக்கு அசெம்பிளி இருக்கு”

“இன்னிக்கே கண்டிப்பா வரணுமா சார்”

“ஆமாம், இன்னிக்கு ராத்திரி ஏழு மணிக்கு, இதே டிபியிலே இண்டர்வியூ நடந்த இதே ஏ.ஸி. ரூம்லே ஆர்டரோட நான் உனக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்.”

“சரி சார் வரேன், நீங்கள் இவ்வளவு நிச்சயமா சொல்றப்ப நான் எப்பிடி சார் தட்ட முடியும்?”

முத்தம்மாள் எம்.எல்.ஏ.யிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.