பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

890

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அரசுப்பட்டி டிராவலர்ஸ் பங்களா ஊர் எல்லையிலிருந்து ஒதுக்குப்புறமாக இருந்தது. அதிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு மேட்டில்தான் காலேஜ் அமையப் போகிற காம்பஸ் இருந்தது. ஆர்டரை ஏன் காலேஜில் வைத்துக் கொடுக்காமல் டிபிக்கு வரச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று எம்.எல்.ஏ. சொல்கிறார் என்பது சந்தேகப்படத்தக்கதாக இருந்தது முத்தம்மாளுக்கு. அந்தச் சந்தேகத்தை அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு சென்று, மீண்டும் திரும்பிப் போய் எம்.எல்.ஏ.யிடம் கேட்ட போது. “அட நீ என்னம்மா, பயித்தியக்காரப் பொண்ணாயிருக்கே? ஏழு மணிக்கு நீ இங்கே வர்ரப்போ பிரின்ஸிபால் அம்மாளும் இங்கேதான் எங்கூட இருப்பாங்க” என்றார் எம்.எல்.ஏ. பிரின்ஸிபால் அம்மாளும் உடன் இருப்பார்கள் என்று அறிந்தவுடன், முத்தம்மாளின் சந்தேகங்கள் அகன்றன. அவள் நிம்மதியாக வீடு திரும்பினாள். தாத்தாவிடமும், அம்மாவிடமும் நடந்தவற்றைச் சொன்னாள்.

“அதான் பிரின்ஸ்பால் அம்மாளும் கூட இருப்பாங்கன்னு சொல்லியிருக்காரே, போயி ஆர்டரை வாங்கிட்டு வா…” என்றார் தாத்தா.

மாலையில் ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டமுத்தம்மாள், அரசுப்பட்டி ஊரெல்லையில் இருந்த முத்தாலம்மன் கோவிலில் சூடம் கொளுத்தி, அம்மனைக் கும்பிட்டு விட்டு, டிராலர்ஸ் பங்களா காம்பவுண்டில் போய் நுழையும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. டி.பி.காம்பவுண்டில் எம்.எல்.ஏ. அந்தியழகனின் கார் நின்றது. கார் ஓரமாக பீடியைப் புகைத்தவாறு டிரைவர் நின்று கொண்டிருந்தான். “ஐயா இருக்காங்களா?” என்று அவள் டிரைவரைக் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, உட்புறமாகக் கையைக் காண்பித்தான். அப்போது டிராவலர்ஸ் பங்களா காம்பவுண்டில் அந்தக் காரையும், டிரைவரையும் தவிர ஈ காக்காய் இல்லை; அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.

அவள் தயங்கியபடியே ,ஏ.ஸி. அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். சிகரெட் புகையும், வேறு ஏதோ வாடையும் நெட்டித் தள்ளியது. உள்ளே மேஜையில் நாலைந்து சோடா புட்டிகளும், கண்ணாடிப் புட்டிகளும் கிளாஸ்களும் இருந்தன. பிரின்ஸிபால் அம்மாளைக்காணவில்லை. எம்.எல்.ஏ. ஆடை அவிழ்ந்தது தெரியாமல் மார்பில் பணியன் கூட இன்றிப் படுக்கையில் நிலை குலைந்து சாய்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் எழுந்து வந்தார் அவர்.

“சார்! பிரின்ஸிபால் அம்மா இன்னும் வரலியா?”

“இதோ அவங்க பக்கத்து அறையில்தான் இருக்காங்க. கூப்பிடறேன். எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லே. நீ உட்காரும்மா” என்று பிரின்ஸிபால் அம்மாளைக் கூப்பிடப் போகிறவரைப் போல் வாயிற் கதவு வரை சென்று குபீரென்று கதவை உட்புறமாகத் தாழிட்டார் எம்.எல்.ஏ. துணுக்குற்ற முத்தம்மாள், கதவை நோக்கி ஓடினாள். எம்.எல்.ஏ.யின் எருமை போன்ற முரட்டு உடல் அவளை நோக்கித் தாவிப் பாய்ந்தது.