பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்

891

“பயப்படாதே தங்கம்! இப்படிஆர்டர் வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஒவ்வொருத்தன் ரெண்டாயிரம் மூவாயிரம்னு பணமா லஞ்சம் கேட்டு வாங்கறான். எனக்கு அதெல்லாம் வேணாம்! இது போதும்” என்று முத்தம்மாளின் செழிப்பான பூப்போன்ற தோள் பட்டைகளில் தன்னுடைய எருமைக் கரங்களை அழுத்திப் பிடித்தான் எம்.எல்.ஏ.

முத்தம்மாள் கூச்சலிட முயன்றாள். வாய் பொத்தப்பட்டது. பின் சாமர்த்தியமாக அங்கே கூச்சலிட்டுப் பயனில்லை என்று உணர்ந்து கூச்சலிடாமல் எம்.எல்.ஏ.க்கு. இணங்குவது போல் போக்குக் காட்டி, அவனைப் படுக்கை வரை அழைத்துச் சென்று கட்டிவில் தள்ளினாள். அவன் நம்பிக்கையோடு சாய்ந்ததும் சரேலென்று திரும்பிய அவள் இரண்டு கைகளிலும் இரண்டு காலி சோடாபாட்டில்களுடன் கட்டிலின் மீது பாய்ந்தாள். நீண்ட நாட்களுக்கு முன் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது தன்னைக் கடித்து விடுமோ என்று அஞ்சிய ஒரு நல்ல பாம்பை அடித்த போது, என்ன உணர்ச்சி வேகம் அவளை ஆட்கொண்டதோ அதே உணர்ச்சி வேகம் இப்போதும் அவளை ஆட்கொண்டது.

பதினைந்தே நிமிஷங்களில் அரசை அந்தியழகனின் மண்டை இரத்தக் களரியாகிவிட்டது. லாரியில் அறைபட்டதொரு நாய் போல் படுக்கையில் கிடந்த அவன் உடலைப் பார்த்து வெறி தணியாமல் நுனி உடைந்த சோடாபாட்டில்களால் தாக்கிக் கொண்டே இருந்தாள் அவள். ஏ.ஸி. அறையாகையினால் யாருடைய கூச்சலும் வெளியே கேட்கவில்லை.

அரை மணிக்குப் பிறகு அவள் வெளியேறிய போது டி.பி. வாசலில் காரருகே பீடி குடித்துக் கொண்டிருந்த டிரைவரையும் காணோம். கையிலிருந்த இரத்தம் குழம்பிய சோடா புட்டியை வீசி எறியவும் தோன்றாமல், மகிஷாசுரமர்த்தினி போல் வீடு நோக்கி நடந்தாள் முத்தம்மாள்.

கொல்லைப்புற வழியாக வீட்டுக் கதவைத் தட்டிய முத்தம்மாளை முதலில் எதிர் கொண்டவர் தாத்தா மாயாண்டி அம்பலம்தான். அப்போது முத்தம்மாளின் அம்மா வீட்டில் இல்லை.

“என்னம்மா கண்ணு? ஏன் கொல்லை வழியாக வந்தே? ஆர்டர் கிடைச்சுதா?”

தாத்தாவுக்குக் கண் பார்வை கொஞ்சம் மங்கல். பேத்தி முத்தம்மாள் இப்போது கொஞ்சமும் பதறாமல், அவருக்குப்பதில் சொன்னாள்.

“தாத்தா ரொம்ப நாளைக்கு முன்னே நான் ஸ்கூல்லே படிக்கறப்போ ஒரு நாகப்பாம்பை அடிச்சுக் கொண்டாந்தேனே, நினைவிருக்கா?”

“அதெப்படிம்மா மறக்கும்? நல்லா நினைவிருக்கு. ரொம்ப நல்லா நினைவிருக்கு.”

“அதைவிடப் பெரிய கருநாகத்தை இன்னிக்கி ரெண்டு கையாலேயும் அடிச்சுக் கொன்னுப் போட்டு வந்திருக்கேன்…”