பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

894

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

காலமான தினத்தன்று உள்ளூர்ப் பெரிய மனிதரும், பிரமுகரும் பஞ்சாயத்துத் தலைவருமான மாவடியாப் பிள்ளை ஊரில் இல்லை. ஏதோ பஸ் தேசிய மய விஷயமாகச் சென்னையிலுள்ள வக்கீலைக் கலந்து பேசப் போயிருந்தார். அவருக்கு ஒரு பஸ் ரூட் இருந்தது. ‘ஃப்ளீட் ஒனர்களில்’ அவரும் ஒருவர்.

தியாகி கந்தப்பப் பிள்ளையைப் போல் உப்பு சத்தியாகிரகம், தனி நபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்டுப் போராட்டம் எதிலும் எதற்காகவும் சிறை செல்லவோ, அடி உதைபடவோ செய்யவில்லை என்றாலும், மாவடியா பிள்ளை1950க்குப்பின் கதர்ச் சட்டையை மாட்டிக் கொண்டு, தேர்தல் நிதிகளுக்குத் தாராளமாக நிதி உதவி செய்ததன் மூலம் முன்னுக்கு வந்து விட்டவர். ஊரில் தியாகி கந்தப்பப்பிள்ளைக்கு வராத செல்வாக்கும், சமூக அந்தஸ்தும் மாவடியாப் பிள்ளைக்கு வந்து விட்டது. பதவி வந்தது. பஸ் ரூட் வந்தது. கட்சியும் கைக்கு வந்தது. ஒன்பதாண்டுச் சிறை வாசம் செய்த கந்தப்பப் பிள்ளைக்கும் கிடைக்காத வசதிகள் எல்லாம் சுதந்திரம் கிடைத்த பின், தேசபக்தராக மாறிய மாவடியாப் பிள்ளை குடும்பத்துக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், மாவடியாப் பிள்ளையின் தந்தை ஜஸ்டிஸ் கட்சி, சுதந்திரம் கிடைத்த பின் ஒரு மகனைக் காங்கிரஸில் உறுப்பினராக்கி வைத்தார் அவர். மற்ற மகன்களை வேறு கட்சிகளில் நுழைத்து விட்டார்; இன்று இந்த நாட்டில் உள்ள பல பணக்காரக் குடும்பங்களுக்கு எந்தக் கட்சி ஆள வந்தாலும், யார் அதிகாரிகளாக வந்தாலும் கவலை இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவும் முன் ஜாக்கிரதையோடு தங்கள் குடும்பத்தில் ஒவ்வொருத்தரை ஒவ்வொரு கட்சியில் பிரமுகராக்கி வைத்திருக்கிறார்கள். ஏழைகளும், மத்திய தர வர்க்கத்தினருமே அப்பாவித்தனமாக ‘ஒன்றே - கொள்கை - ஒருவனே தலைவன்’ என்று நம்பிக்கைக் கொண்டு தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்; மாவடியாப் பிள்ளையோ, அவருடைய குடும்பத்தினரோ எந்தக் காலத்திலும், எதற்காகவும் இப்படித் திண்டாடியதில்லை. அவர்களுக்கு இங்கிதம் தெரிந்திருந்தது.

சென்னையிலிருந்து திரும்பியதும், கந்தப்பப் பிள்ளை காலமான செய்தி அறிந்த மாவடியாப் பிள்ளை உடனே கந்தப்பப் பிள்ளையின் குடும்பத்தினரைப் பார்த்துத் துக்கம் கேட்கச் சென்றார். ஒரு பெரிய அனுதாபக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார். கந்தப்பப் பிள்ளை குடும்பத்துக்கு நிதி உதவிக்கு ஒரு குழுவும் அமைத்தார். அனுதாபக் கூட்டத்துக்குத் தான் நேரில் போக முடியாத கந்தப்பப் பிள்ளையின் மனைவி, மணமாகாமல் வீட்டில் இருந்த பெண்கள் இருவரையும் அனுப்பி வைத்திருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு அனுதாபக் கூட்டம் என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. டவுன் ஹாலில் கூட்டம் நடக்கும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆறு மணிக்குத்தான் கொஞ்சம் கூட்டம் சேர்ந்திருந்தது. “ஹால் நிறையக் கூட்டம் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணு. அப்புறம் நான் வர்ரேன்” என்று கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் மாவடியாப் பிள்ளை, செயலாளரிடம் சொல்லி வைத்திருந்தார். மற்றப் பேச்சாளர்கள் எல்லாம் கூட வந்தாயிற்று: ஆறரை மணிக்குத்தான் மாவடியாப் பிள்ளை ஒரு பெரிய காரில், சில்க் ஜிப்பா மினுமினுக்க விரல்களில் வைர மோதிரங்கள்