பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : அனுதாபக் கூட்டம்

895

மின்ன வந்து இறங்கினார்; எதிர்ப்பட்ட கூழைக் கும்பிடுகளுக்குப் பதில் கும்பிடு போட்டபடி அவர் உள்ளே நுழைந்து, தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார். உடனே கதர் ஜிப்பா அணிந்த ஒல்லியான ஆள் ஒருவன்-அப்போதுதான் முதல் முதலாக மைக்கில் பேசுகிறானோ - என்னவோ மைக்கையே வாயால் கடித்து விடுவது போல் அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு பேசினான்!

“பொது மக்களே! நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வள்ளல் மாவடியாப் பிள்ளை அவர்கள் வந்து விட்டதால் கூட்டம் தொடங்குகிறது” என்று அறிவித்து விட்டு, “மறைந்த தியாகி கந்தப்பப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வதற்காக எல்லாருமே இரண்டு நிமிஷம் மெளனமாக எழுந்து நிற்க வேண்டும்” என்று கூட்டத்தினரை நோக்கி வேண்டினான் அவன். உடனே எல்லாரும் எழுந்திருந்து மெளனமாக நின்றார்கள். இரண்டு நிமிஷங்கள் ஆனதும், முதலில் கூட்டத் தலைவர் மாவடியாப் பிள்ளை தம் இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து மற்றவர்களும் அமர்ந்தார்கள். மாவடியாப் பிள்ளையைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கச் சொல்லி ஒருவன் முன்மொழிய, மற்றொருவன் வழி மொழிந்த பின் கூட்டம் தொடங்கியது. முதலில் பஸ் அதிபர் மாவடியாப் பிள்ளை பேசினார் :

“நண்பர்களே! எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. கந்தப்பப் பிள்ளை சிறநத தேச பக்தர். அவரைப் போன்றவர் இன்னும் சிறிது காலம் வாழ என் உயிரையும் கூட நான் அளித்திருப்பேன். என் முன்னேற்றத்தைக் கண்டு பூரித்த பெருமகன் அவர். அவர் ஆசியோடு முன்னேறியவன் நான். அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட இதோ இந்த கூட்டத்திலேயே பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அறிவிக்கிறேன்” என்று கூறி, அவர் பேச்சை முடித்தார்.அதற்குப் பின் பேசிய யாரும் கந்தப்பப் பிள்ளை இறந்தது பற்றி பேசவோ, வருந்தவோ இல்லை. எல்லாருமே பஸ் அதிபர் மாவடியாப் பிள்ளையின் தாராள குணத்தை வியந்தும், அவர்ப் பத்தாயிரம் ரூபாய் தருவதாக அறிவித்ததைப் புகழ்ந்துமே பேசினார்கள். கடைசிப் பேச்சாளர் வரை மாவடியாப் பிள்ளையின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்துதான் பேசினார்கள். அது கந்தப்பப் பிள்ளை இறந்ததற்காக நடத்தப்பட்ட அனுதாபக் கூட்டம் என்பதை விட மாவடியாப் பிள்ளையைப் பாராட்ட நடத்தப்பட்ட கூட்டம் என்பது போல நடந்து முடிந்து விட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த கந்தப்பப் பிள்ளையின் மகள்கள் இரண்டு பேரும் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கேட்டு விட்டு அவசரம் அவசரமாக வீடு திரும்பினார்கள்.

“என்னடி? என்ன பேசினாங்க? பண உதவிக்கு எதினாச்சும் வழி உண்டா? மானமா உங்களைக் கட்டிக் கொடுத்துப் புருசன் வீட்டுக்கு அனுப்ப முடியுமா?” என்று திருமதி கந்தப்பப் பிள்ளை அவர்களைக் கேட்ட போது,

“அங்கே முதல்லே பேசினவரு அப்பா பெயரிலே மண்டபம் கட்டப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தரேன்னு சொன்னாரு. அவ்வளவுதான். அதுக்கப்புறம் பேசினவுங்க யாருமே அப்பாவைப் பற்றி எதுவுமே பேசலை. நன்கொடை தரேன்னு சொன்னவரைப் பத்தித்தான் உசத்தியாப் புகழ்ந்து பேசினாங்க. அப்புறம் கடைசி வரை