பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பரபரப்பாக ஒரு செய்தி

899

ஊர்ப் பஞ்சாயத்துப் போர்டு கட்டிடத்திற்கும் நடுவே, கிராமத்தில் ஒரு முருகன் கோவில் அமைந்திருந்தது. அந்த முருகன் கோவில் கட்டிடத்தின் முகப்பான தகரக் கொட்டகைதான் திருமுறைக் கழகத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிற அரங்கமாகப் பயன்பட்டு வந்தது. சைவ வேளாளர் மகமை வசூல் பணத்திலிருந்து கோவில் நடந்து வந்தது. திருமுறைக் கழகக் காரியதரிசி சுப்புரத்தினம்தான் இதற்கும் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார்.

கோவிலுக்கு வடக்கே, பஞ்சாயத்து போர்டு கட்டிடத்திற்கு மேற்கே இரண்டு பர்லாங் தூரத்தில் பெரிய மசூதி. கிராமத்தின் மிகப் பெரிய செல்வந்தர்கள் எல்லாம் முஸ்லீம்களாக இருந்ததனால், மசூதி பெரிதாகவும், அழகாகவும், நன்றாகவும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருந்தது.

அலைக்கரைப்பட்டி கிராமத்தில் யாரும் பிரசாரம் செய்யாமலே மதச்சார்பற்ற மனப்பான்மை நெடுங்காலமாக இருந்தது. சுலைமான் சேட் முருகன் கோவிலுக்கு வந்து அருள் பாடல்களைக் கேட்டு உருகுவதோ, இந்துக்கள் மசூதி வாயிலில் உள்ள மெளல்வியிடம் பயந்த குழந்தைகளுக்கு மந்திரித்துக் கொண்டு வருவதோ அங்கு மிகவும் சகஜமாக நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு பெளர்ணமியிலும் அலைக்கரைப்பட்டி முருகன் கோவில் அன்னை பரிசுத்தாதேவி குழுவினரின் பக்திப் பாடல்கள் ஒலிப்பது என்னும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே சகஜமான நிகழ்ச்சியாகி இருந்தது. சுலைமான் சேட் இந்த அருள் இசைக் கச்சேரிகளுக்கு மிகவும் உதவி புரிந்ததைக் கொண்டாடாத இந்துக்கள் உள்ளூரில் இல்லை. அருளரசிஅன்னை பரிசுத்தாதேவியின் வயதை யாராலும் கணிக்க முடியாமலிருந்தது. அவர் பதினெட்டு வயதுக் குமரி போல் இளமையாயிருந்தார். ஆனால், அவருடைய முகபாவத்தில் முதிர்ந்த ஞானப் பக்குவம் தெரிந்தது. நல்ல உயரமும், மயக்கக்கூடிய அழகும் உள்ள கட்டுடலோடு அவர் வெள்ளை நிற அழகில் துளசி மணிமாலை மின்னக் கையில் தம்புராவுடன் பாட வரும் போது சாட்சாத் மீரா தேவியே எதிரில் வந்து நிற்பது போல் இருக்கும். அவருடைய கோஷ்டியில் மொத்தம் அவரைத் தவிர பதினோரு பெண்கள். எல்லாருமே அதிரூப சுந்தரிகள். ஆனால், வெள்ளை மல் புடவை, துளசி மணி மாலை, காவியேறாத முத்துப் பற்கள்; ஒளி வீசும் துறவுக் கோலத்தில் எளிமையாகவே அனைவரும் விளங்கினர். அவர்களில் இருவர் சுருதிப் பெட்டி, ஒருவர் ஆர்மோனியம், இருவர் மிருதங்கம், இருவர் வீணை, இருவர் தபேலா, இருவர் ஃபிடில் என்று வாத்தியங்களுடன் தோன்றி உடன் பாடினர். அவர்களுடைய குரலினிமையும், பக்திப் பாடல்களும் அனைவரையுமே பரவசப்படுத்தின. ஒவ்வொரு முறையும் அருளரசி அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டியை அடைவதற்காகச் சென்னையிலிருந்து புறப்பட்டுப் பக்கத்து நகரத்துக்கு ரயில் மார்க்கமாகவோ, விமான மூலமாகவோ வந்து சேருவதற்கும், அங்கிருந்து கிராமத்திற்கு வருவதற்கும் சுலைமான் சேட் நிறைய சிரமம் எடுத்துக் கொண்டார்.

பக்கத்து நகரத்துக்குப் போய் அவர்களை அழைத்து வர அவருடைய சவர்லெட் இம்பாலா கார் ஒன்றும், மெர்ஸிடீஸ் பென்ஸ் கார் ஒன்றும் பறக்கும். பெட்ரோல்